பத்துப்பாட்டு வரிசையில் ஐந்தாவதாக
வைக்கப்பட்டுள்ள முல்லைப்பாட்டு நூல் 103 அடிகளைக் கொண்ட பாடல். நூலின்
ஆசிரியர் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார்
என்பவர். சோழநாட்டைச் சேர்ந்த வணிகராக இவர் இருந்திருக்க வாய்ப்புண்டு.
நேரிசை ஆசிரியப்பாவில் இந்நூலை எழுதியுள்ளார் நப்பூதனார். பாடலில்
பாடப்பட்டவர் பெயர் இன்னதென்றுக் குறிப்பு இல்லாவிட்டாலும்
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்று கருதப்படுகிறது.
நப்பூதனார் நெடுஞ்செழியனின் அவைப்புலவர் என்றும் கருதப்படுகிறது.
போருக்குச் சென்ற தலைவன் தான் மீண்டும் கார்காலத் துவக்கத்தில்
திரும்புவதாக அறிவித்துச் செல்ல, அவன் வரவை எதிர்நோக்கித் தலைவியும்,
தலைவியின் நினைவாகப் போர்முனையிலிருந்த தலைவனும் வருத்தமுற்று, பின்
மீண்டும் இணைவதைச் சொல்கிறது முல்லைப்பாட்டு நூலின் கருத்து. பாடலில்
இரண்டிலிருந்து மூன்று விழுக்காடு வடமொழிச் சொற்கள் இருப்பதாகவும் பாடலில்
காலம் கி. மு. 2 ஆம் நூற்றாண்டு என்பதும் மறைமலையடிகளின் கருத்து.
கார்காலத்தின் இயற்கை, தலைவியின் தனிமை
உணர்வு, போர்க்களத்தின் சூழல் ஆகியன செம்மையாக விவரிக்கப்படுவதாகத்
தமிழறிஞர்களின் பாராட்டைப் பெரும் இலக்கியம் முல்லைப்பாட்டு. முல்லை
சார்ந்த ஒழுக்கங்களாகப் பாடலில் இடம்பெறுவது; பகை வெல்லும் பொருட்டு,
வேற்றோர் அரசனின் நாடு கைப்பற்றும் நோக்கத்துடன் தலைவன் தானே போருக்குச்
செல்லுதலான வஞ்சித்திணை புறவொழுக்கமும்,அதனால் பிரிந்த தலைவியும் தலைவனும்
தனது காதல் துணையை எண்ணிக் காத்து இருத்தலும் இருத்தல் நிமித்தமுமான
அகவொழுக்கமும் பாடலில் காணப்படுகிறது. இச்சூழல் உணர்த்தும் நிகழ்வை
இக்காலத்தில் இயக்குநர் மணிரத்தினம் தளபதி படத்தில்,”சுந்தரி கண்ணால் ஒரு
சேதி சொல்லடி இன்னாள் நல்ல தேதி” என்ற பாடலில் மிகச் சிறப்பாகக் காட்சிப்
படுத்தியதையும் [https://youtu.be/6PPpbSB0iME] இங்கு நினைவு கூரலாம்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.