Wednesday, 18 October 2017

அல்கட்ராஸ் தீவில் . . .(பகுதி-2)


II. சிறைச்சாலை சுற்றுலா:
Siragu alkatraas2-1
அல்கட்ராஸ் தீவிற்குச் சுற்றுலா செல்ல விரும்பினால் சில முன்னேற்பாடுகள் தேவை, கலிபோர்னியா மாநிலம் நல்ல தட்பவெப்பநிலை உள்ள இடம்தானே என நினைத்து சாதாரண உடைகளுடன் வர நினைத்தால் குளிரில் நடுங்க வேண்டிய நிலையும் ஏற்படலாம். வானிலை எப்படி இருக்கக்கூடும் என்று நிர்ணயிக்க முடியாத ஒரு பகுதி சான் பிரான்சிஸ்கோ நகர். “நான் அறிந்த மிகவும் குளிரான ஒரு காலம் சான் பிரான்சிஸ்கோவில் நான் வசித்த கோடைக்காலம்” என மார்க் ட்வைன்   (“The coldest winter I ever saw was the summer I spent in San Francisco”― Mark Twain) கூறியதாகவும் சொல்லப்படுகிறது. எனவே குளிராடை கைவசம் இருப்பதும், தேவையினால் நீண்ட நடைப் பயணம் செய்ய வசதியான காலணியும் இருப்பதும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அவசியம். வாடகை ஊர்திகளையும், நகரப் பேருந்துகளையும் கொண்டு தீவுக்கான ‘படகுத்துறை எண் 33′ இருக்கும் புகழ்பெற்ற ‘ஃபிஷெர் மேன்ஸ் வார்ஃப்’ (Fisherman’s Wharf) பகுதிக்கு வருவதே சிறந்த வழி. சொந்த ஊர்தியில் பயணித்து சான் பிரான்சிஸ்கோ வந்த பிறகு அதை நிறுத்த இடம் தேடுவதோ மிகப்பெரிய தலைவலி.

மேலும், அல்கட்ராஸ் தீவு சுற்றுலாவுக்கான அனுமதிச் சீட்டை இணையம் வழி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். நாளொன்றுக்கு ஒரு குறிப்பிட்ட அளவிலேயே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதாலும், பார்வையாளர் கூட்டம் அதிகமிருப்பதாலும் முன்பதிவு செய்வது ஏமாற்றத்தைத் தவிர்க்கும். அரைமணி நேரத்திற்கு ஒரு முறை நூற்றுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களுடன் படகுத்துறையில் இருந்து படகுகள் தீவை நோக்கிச் செல்லும். மேலும் படகில் அனுமதிக்கும் முன்னர் அரசு வழங்கிய அடையாள அட்டையையும் காட்டத் தேவை. தீவின் கடைசிப் பார்வையாளர் நேரம் வரை அங்கு எவ்வளவு நேரமானாலும் தங்கலாம். தீவைச் சுற்றிப்பார்க்க குறைந்தது மூன்று மணி நேரமாவது தேவை. அதனால் சுற்றிப் பார்த்து முடித்த பிறகு அவரவர் விருப்பம் போல கிடைக்கும் அடுத்த படகைப் பிடித்து சான் பிரான்சிஸ்கோ வரலாம். தீவில் மலர்களை இலைகளைப் பறிப்பது போன்ற செடி கொடி மரங்களுக்குத் தீங்கு செய்யும் நடவடிக்கைகளையும், பறவைகளுக்கு உணவளிப்பது போன்ற செய்கைகளையும் செய்ய அனுமதியில்லை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment