சென்ற நூற்றாண்டின் தமிழக அரசியலில் பல திருப்பங்களுக்குக் காரணமான முடிவுகள், திட்டங்கள் தீட்டப்பட்ட இடங்கள் சில திருச்சி மாநகரில் உண்டு. அவற்றில் ஒன்று திருச்சி புத்தூரில் உள்ள பெரியார் மாளிகை (புவியிடக் குறிப்பு: 10.814159, 78.675790). இந்த இடத்தைப் பெரியார் இயக்கத்திற்காக வாங்க சுயமரியாதை இயக்கத் தொண்டரான தி. பொ. வேதாசலம் பெரும் முயற்சி செய்தார் எனவும், பின்னர் இவர் திருச்சியில் பெரியாரால் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்களுக்குத் தாளாளராக அமர்த்தப்பட்டார் என்றும் வே. ஆனைமுத்து அவர்களின் நூல் (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்) குறிப்பிடுகிறது.
தமிழக அரசியலில் திருப்புமுனையாக, 1967-ம்
ஆண்டில் திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர் அறிஞர் அண்ணாவை தலைவராகக்
கொண்ட தி.மு.கழகம் முதன் முதலாக தமிழகத்தில் ஆட்சி அமைத்த பொழுது,
முதல்வராகப் பொறுப்பேற்கும் முன்னர் அறிஞர் அண்ணாதுரை அவர்கள், கலைஞர்
கருணாநிதியுடனும் நாவலர் நெடுஞ்செழியனுடனும் திருச்சி பெரியார் மாளிகையில்
தங்கியிருந்த பெரியாரைச் சந்தித்து தங்கள் கட்சியின் வெற்றியைச்
சமர்ப்பித்து அவரது வாழ்த்தைப் பெற்றார். திராவிடக்கழகத்தில் இருந்து
பிரிந்து சென்றதால் அவர்கள் மீது கசப்புணர்வுடன் இருந்த பெரியார்,
அவர்களுக்கு எதிராகவும் தேர்தலிலும் பிரச்சாரம் செய்திருந்தார்.
இருப்பினும் அந்தப் பிரிவினையைப் பொருட்படுத்தாது அவரை மதித்து, மறக்காமல்
வாழ்த்துப் பெற வந்தவர்களைக் கண்டு மனம் நெகிழ்ந்து “சந்தோசங்க! ரொம்ப
சந்தோசங்க” என்று பாராட்டி வாழ்த்தியிருக்கிறார் பெரியார்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment