சி.என். அண்ணாதுரை எழுதிய நூல்களுள்
மிகவும் சர்ச்சைக்குரிய நூலாகவும், தடைசெய்யப்பட்ட நூலாகவும், அதையும்விட
அவருக்கு ஆறு மாதங்கள் சிறைதண்டனையும், 700 ரூபாய் அபராதத்தையும் சென்னை
மாநில அரசு விதிப்பதற்குக் காரணமாக இருந்த நூல் “ஆரியமாயை”. சுமார் அறுபது
பக்கங்களைக் கொண்ட மிகச் சிறிய நூல் இது. இந்நூலில் ஆரியர்களாகிய
பிராமணர்களை அண்ணாதுரை மிகக் கடுமையாகச் சாடுவதாகவும், ஆரிய இனச்சேர்க்கை,
திரைமறைவுகளை உருவகப்படுத்தும் விதமாக எழுதப்பட்டிருப்பதாகவும் விமர்சனம்
வைக்கப்பட்டதாக அறிய முடிகிறது. நூல் முழுவதும் அவர் அக்கால (1940 களில்)
எதிரணியில் இருந்த ஆரியச் சார்பு கொண்டிருந்த அரசியல்வாதிகள் பலரைக்
குறிப்பிட்டு அவர்களுக்கு மறுமொழி அளிக்கும் விதத்திலும், தமிழர்களை நோக்கி
எழுதியிருப்பதையும் காணலாம். அவ்வாறே, நூலின் சில பகுதிகளில் மாணவர்களை
நோக்கியும், சில பகுதிகளில் தமிழறிஞர்களை நோக்கியும் எழுதியிருப்பதையும்
காணமுடிகிறது.
மக்களிடையே கிளர்ச்சி செய்கின்ற நூல் என்ற
காரணத்திற்காக வழக்கு தொடரப்பட்டு அவர் பலமுறை நீதிமன்றத்திற்கு
இழுத்தடிக்கப்பட்டதை, “ஆரிய மாயை வழக்குக்காகப் பலமுறை முக்கியமான
அலுவல்களையெல்லாம் விட்டு விட்டு திருச்சிக்குச் சென்று வருகிறேன்.
அடிக்கடி வாயிதா போடுகிறார்கள். கம்பராமாயண சீலர் கலாரசிகர் தோழர் பாஸ்கரத்
தொண்டைமானைத் தான் இந்த வழக்கை விசாரிப்பதற்காக
ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆரியமாயைக்கு அவர் தடை விதித்து என்னைச்
சிறையில் தள்ளினால் மறுநாளே ஆயிரக்கணக்கான துண்டு பிரசுரங்கள் மூலம் ஆரிய
மாயை அச்சாகி எங்கும் பறக்குமே! சர்க்கார் இப்போது ஆரியமாயை, இலட்சிய
வரலாறு, இராவணகாவியம் போன்ற நல்ல நூல்களைப் படித்து வருவது பற்றி மிகவும்
மகிழ்ச்சி அடைகிறேன். அண்ணாதுரை உள்ளதைத்தான் எழுதினான் என்று அவர்களுக்கு
நன்று தெரிந்ததே. சர்க்கார் நூல்களின் மீது தடைவிதிப்பதை விட்டுவிட்டு
முக்கியமாகச் செய்யவேண்டிய காரியங்களில் ஈடுபடுவது நல்லது” என்று அவர்
வாயிலாகவே அவரது மேடைப்பேச்சு ஒன்றின் மூலம் அறியவும் முடிகிறது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment