ஒவ்வொருவரும் ஒவ்வொரு பணி செய்கிறார்கள்.
எவரும் சும்மா இருப்பதே சுகம் என்று இருப்பதில்லை. ஒவ்வொரு பணியும் ஒரு
சமயத்தில் பணியாகின்றது. மற்றொரு சமயத்தில் கடமையாகின்றது. கோயிலில்
செய்கின்றபோது எப்பணியும் திருப்பணி ஆகின்றது. கோயில் பூசை செய்வோர்
தொடங்கி, திருஅலகிடுவோர் வரை கோயில்பணிகள் பலவாறாக உள்ளன. இப்பணிகளுள்
ஒன்று பண்ணிசைத்தல் என்பதாகும். கோயிலில் இசைத் தமிழும் இயற்றமிழும் நாடகத்
தமிழும் வளர்க்கப்பெற்றுவந்தன. இவற்றில் இசைத்தமிழான பண் இசைத்தல் பற்றி
ஒரு சிற்றிலக்கியமே உள்ளது. கோயில் திருப்பண்ணியர் திருவிருத்தம் என்பது
அவ்விலக்கியத்தின் பெயராகும். பண்ணியர் என்பதை பல வகைகளில் பொருள்
கொள்ளலாம். பண்ணியர் என்பது இங்குப் பண்ணிசைப்பவர்கள் குறித்த இலக்கியம்
என்ற நிலையில் பெருமை பெறுகின்றது. பண்ணியர் என்பதை தில்லைப் பெருமான்
என்று பொருள் கொண்ட உரையாளர்களும் உண்டு.
நம்பியாண்டார் நம்பியால் கட்டளைக்
கலித்துறையில் இயற்றப்பட்ட எழுபது பாடல்கள் கொண்ட தொகுப்பு திருப்பண்ணியர்
விருத்தம் என அழைக்கப்படுகின்றது. இவ்விலக்கியத்தின் ஒவ்வொரு பாடலிலும்
சிவபெருமானின் பெருமை விதந்து ஓதப்படுகிறது. அதனுடன் கோயில் சார்ந்த
பணிகள், பணியாளர்கள், கோயில் சார்ந்த சமுதாயம் போன்றன பற்றிய செய்திகளும்
காட்டப்பெற்றுள்ளன.
இப்பாடல்களின் வழியாக அக்கால சமுதாயம்
எவ்வாறு கோயில் சார்ந்து வாழ்ந்தது என்பதையும், கோயில் திருப்பணிகள் எந்த
அளவிற்கு நடைபெற்றன என்பதை அறிந்து கொள்ளமுடிகின்றது.
நம்பியாண்டார் நம்பி திருமுறைகளை
வகுத்தவர் ஆவார். இவரின் தொகுப்பு முயற்சியால் சைவம் தழைத்தது. சைவ நூல்கள்
என்றும் பாதுகாப்பினைப் பெற்றன. திருக்காப்பினைச் செய்த இவர் தன்
காலத்தில் தான் வாழ்ந்த சமுதாயத்தின் நிலைப்பாட்டை, சமயத்தால் சமுதாயம்
முன்னேற இயலும் என்ற நிலையில் பக்தி சார்ந்த படைப்புகளைப்
படைத்தளித்துள்ளார். இப்படைப்புகள் இனிய படைப்புகளாக, சமுதாயத்தின்
முன்னேற்றம் சொல்லும் படைப்புகளாக விளங்குகின்றன. இவரின் படைப்புகளுள்
ஒன்று கோயில் திருப்பண்ணியர் விருத்தம். இப்பனுவல் சிறந்த முறையில்
சமுதாயத்தை சமய நெறிப்படி வாழ வழி செய்விப்பதாக உள்ளது. சமயத்தின்பாலும்,
இறைவன் மீதும் பற்றும் பக்தியும் கொண்ட சமுதாயம் முன்னேற்றம் கொள்ளும்
என்பதற்கு இவரின் இப்படைப்பே சான்றாகும்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment