தமிழில் நமக்குக் கிடைக்கும் முதல் நூலான
தொல்காப்பியத்தின் காலத்தில் தமிழகத்தின் எல்லைகளாக வடக்கே வேங்கடமும்
தெற்கே குமரியும் கிழக்கிலும் மேற்கிலும் கடல்கள் எல்லைகளாக இருந்தன எனத்
தெரிகிறது. இதனைத் தொல்காப்பியத்திற்குப் பாயிரம் தந்த பனம்பாரனார்,
“வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்” எனக் குறிப்பிட்டு
தமிழ்கூறும் நல்லுலகம் வடக்கில் வேங்கடமலைக்கும், தெற்கில் குமரிமுனைக்கும்
இடையில் பரந்துகிடந்ததை (தொல்காப்பியம், சிறப்புப்பாயிரம்:1-3)
விளக்குவார்.
“தென்குமரி வடபெருங்கல்
குணகுட கடலா எல்லை”
என்ற குறுங்கோழியூர் கிழார் (புறநானூறு:17:1-2); மாங்குடி மருதனார் (மதுரைக்காஞ்சி:70-71) சங்கப்பாடல்களிலும்,
“நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
தமிழ் வரம்பறுத்த தண்புனல் நல்நாட்டு”
என இவ்வாறே இளங்கோவடிகள் சிலப்பதிகாரம்
வேனிற் காதையிலும் (வேனிற்காதை:1-2) குறிப்பிடுவதால் பண்டையத் தமிழகத்தின்
எல்லையை நாம் அறிகிறோம்.
தென்குமரி:
இலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட தமிழகத்தின் தென் எல்லையான குமரிமுனையைக் கடல் கொண்டது என்பதை,
“வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள” (சிலப்பதிகாரம், காடுகாண் காதை:19-22)
என்று இளங்கோவடிகள் குறிப்பிடுவார்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.