பக்தி என்பது இலக்கியமாக இயக்கமாக
இந்தியாவில் வளர்த்தெடுக்கப்பெற்று வருகிறது. பக்தியின் வழியாக உயிர்க்கான
நிறைநிலையான பிறவாமையை அடைவது, அறிவுக்கான நிறைநிலையான ஞானத்தை அடைவது
என்பன குறிக்கோள்களாக விளங்குகின்றன. தமிழகத்திலும், கேரளத்திலும் கிருஷ்ண
பக்தி என்பது கலை சார்ந்த நிலையில் வளர்ந்து வருகிறது. குழந்தையாகக்
கண்ணனைப் பாவித்து அவனது ஆடல்களை, ஆட்டுவிப்புகளைப் புகழ்வது, அவனைச்
சரணடைவது என்பன கிருஷ்ண பக்தி நூல்களின் பொதுப்பண்புகளாக விளங்குகின்றன.
கேரளத்தில் பதினாறாம் நூற்றாண்டில்
வாழ்ந்த பக்தியாளர் பூந்தானம் என்பவர் ஆவார். இவரின் இயற்பெயர்
தெரியவில்லை. இவரின் குடும்பப் பெயர் பூந்தானம் என்பதாகும். அதுவே இவர்
பெயராகவும் ஆகிவிட்டது. இவர் ஓரளவிற்கு கற்றவர். வேதப்பயிற்சி, இலக்கியப்
படைப்பாக்கப் பயிற்சிகளை ஓரளவு பெற்றவர். இவர் எழுதிய மலையாள மொழி சார்ந்த
வேதாந்த நூல் ‘‘ஞானப்பானா” என்பதாகும். ஞானத்தைப் பற்றிய பானா (பானை) என்ற
கவிவடிவத்தில் எழுதப்பெற்ற நூல் இதுவாகும். இது பூந்தானத்தின் மகன்
மறைவின்போது ஏற்பட்ட பற்றற்ற தன்மையின் காரணமாகப் பாடப்பெற்ற நெடும்பாடல்
ஆகும். இது முன்னூற்று ஐம்பத்தாறு அடிகளை உடையது. ‘‘உலக வாழ்வு
அர்த்தமற்றது. கலிகாலத்தில் மக்கள் இறைசிந்தனையைப்
பெருக்கிக்கொள்ளவேண்டும். விஷ்ணு நாமத்தைத் தொடர்ந்து உச்சரிக்கவேண்டும்.
எவரும் கர்மபலனை அடைந்தே தீரவேண்டும்” போன்ற பல்வேறு கருத்துகளை
எடுத்துரைக்கிறது. வேதங்கள், கீதை ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இப்பனுவல்
எழுதப்பெற்றுள்ளது. இந்நூல் மலையாள மொழி சார்ந்தது. அதிகம் வடமொழி
கலப்பில்லாத பதினாறாம் நூற்றாண்டுத் தமிழ் நடை சார்ந்த பனுவலாக இது
விளங்குகிறது. பல பாடல்கள் பகுதிகள் தமிழாகவே உள்ளன.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment