சங்க இலக்கியங்களில் பல புனைவுகள்
இடம்பெற்றுள்ளன. குறிப்பாக சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள பெண்
குறித்தான புனைவுகள் கூர்ந்து கவனிக்கத்தக்கன. பெண்ணியம் விழித்து எழுந்து
மூன்றாம் அலையாய்ப் பரவும் இக்கால எல்லையில் அப்புனைவுகளைப் பெண்ணிய
நோக்கில் ஆராய்வது என்பது புதிய வெளிச்சத்தைப் பரப்பும் என்பதில் ஐயமில்லை.
சங்கஇலக்கியங்களில் காணப்படும் பெண்
சார்ந்த புனைவுகளாகப் பின் வருவனவற்றைக் கொள்ள இயலும். கொல்லிப்பாவை,
பெண்கொலை புரிந்த நன்னன், திருமாவுண்ணி, அன்னிமிஞிலி ஆகிய புனைவுகளில் பெண்
பாத்திரங்கள் மையமாக அமைகின்றன. இக்கதைகள் வாய்மொழிப் புனைவுகளாகும்.
இவற்றை உருவாக்கியவர்கள் யார் என்று அறியாத நிலையில் இவை எவரால்
சொல்லப்பட்ட புனைவுகள் என்பதை அறிய இயலாத நிலை உள்ளது. இவை உவமைகளாக,
எடுத்துரைப்புகளாக இருப்பதை எண்ணிப் பார்க்குங்கால் தமிழ்ச் சமுதாயத்தில்
இவை வழிவழியாகப் பயன்படுத்தப் பெற்று வந்துள்ளன என்பதை மட்டும்
உணரமுடிகின்றது.
தற்காலத்தில் தொன்மம் சார்ந்த
புனைவுகளிலும் பெண்ணிய ஆய்வு மேற்கொள்ளப்பெறுகின்றது. இதுகுறித்த
பின்வரும் ஆய்வாளரின் கருத்து நோக்கத்தக்கது. ‘‘தற்போதைய காலக்கட்டத்தில்
பெண்ணிய இயக்கம் சமுதாய அறிவியல், தொல்லியல், தொல்மானிடவியல், இறையியில்
போன்ற பலதுறைகளைக் கவனித்து வருகிறது. அதே நேரத்தில் அவற்றில்
இடம்பெற்றுள்ள தொன்மக் கூறுகளை பெண்மையத்துடன் ஆராயத் தலைப்படுகிறது.
அவற்றில் காணப்படும் ஆ;ண் மையமிட்ட அரசியலை, ஆண் பாத்திரங்களை அவை
குறித்த சொல்லாடல்களை வெளிப்படுத்த பெண்ணிய நோக்கு முன்வருகிறது.
இத்தொன்மங்களில் உள்ள பெண் மௌனம், பெண்ணுக்கான இடமில்லா நிலை போன்றனவும்
நுணுக்கமாக கவனிக்கப்படுகின்றன என்ற கருத்தின் வழியாக பெண்ணியம்
தொன்மங்களிலும் தன் ஆய்வினைச் செலுத்திவருகிறது என்பது உணரப்படுகின்றது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment