தமிழ்மொழி தொன்மை வாய்ந்த மொழி. அதனுள்
பல்வகை, பல்வேறு இலக்கியங்கள் எழுந்துள்ளன. இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட கால
அளவில் வளர்ந்துவரும் தமிழ்மொழியில் அதன் இலக்கியங்களில் பல்வேறு
பதிவுகள் காணப்படுகின்றன. மொழியியல், இலக்கணவியல், இலக்கியவியல்,
அழகியல், அறவியல், பண்பாட்டியல், அறிவியல் போன்ற பல்துறை சார் பதிவுகள்
தமிழ் இலக்கியங்களில் பதிவு செய்யப்பெற்றுள்ளன. குறிப்பாக செம்மொழி
இலக்கியங்கள் காலத்தாலும், கருப்பொருளாலும், வெளிப்பாட்டுத் தன்மையாலும்,
பல்துறை இயல் சார் அறிவின் பதிவுகளாலும் தனித்திறம் பெற்று விளங்குகின்றன.
‘‘முதலாவதாகத் தமிழ்மொழி மிகுந்த பழமைச்
சிறப்பு வாய்ந்த மொழி. ஏனைய தற்கால இந்திய மொழிகளின்
இலக்கியங்களுக்கெல்லாம் காலத்தால் மிகவும் முற்பட்ட, ஏறத்தாழ ஆயிரம்
ஆண்டுகளுக்கும் அதற்கு மேலும் முற்பட்ட பேரிலக்கியங்களைக் கொண்டது
தமிழ்மொழி. தமிழில் மிகப் பழம்பெரும் நூல் தொல்காப்பியம். தொன்மைக்காலக்
கல்வெட்டுக்களிலிருந்து இந்நூலின் பகுதிகள் காலத்தால் மிக முற்பட்டவை
எனவும், ஏறத்தாழ கி.மு. 200க்கு முன்பே இந்நூல் எழுந்துள்ளது எனவும்
தெரிகிறது. பழந்தமிழரின் பேரிலக்கியங்கள் சங்க இலக்கியங்கள் ஆகும். அவை
பத்துப்பாட்டும் எட்டுத்தொகை நூல்களும் பிறவும் ஆகும். அவை ஏறத்தாழ கி.பி.
முதல் இரு நூற்றாண்டுகளில் எழுந்தவை எனக் கொள்ளலாம். அவை வடமொழியில்
காளிதாசரின் பேரிலக்கியங்கள் தோன்றுவதற்கு இரு நூற்றாண்டுகளுக்கு முன்னமே
தோன்றிவிட்டன. மதச் சார்பற்ற இந்தியாவில் முதன் முதலில் எழுந்த மதச்
சார்பற்ற பெருங்கவிதைத் தொகுப்பு சங்கஇலக்கியங்கள் என்றால் அது மிகையாகாது”
என்ற ஜார்ஜ் எல். ஹார்டுவின் கருத்துத் தமிழ்ச்செம்மொழி இலக்கியங்களின்
தன்மையை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment