நூலும் நூலாசிரியரும்:
சிலப்பதிகாரத்தின் தனிப்பெருமை அது
ஐம்பெருங்காப்பியங்களுள் தலையாயது என்ற சிறப்பு. அது பிறமொழி
காப்பியங்களின் தழுவல் அன்று, தமிழகத்திற்கே உரித்தான இலக்கியம்.
தமிழகத்தின் ஒரு வரலாற்றுக் களஞ்சியம். தமிழினத்தின் பண்பாட்டுப் பெட்டகம்.
சாதாரண மக்களின் வாழ்வையும் காட்டும் வரலாற்று இலக்கியமாகத் தமிழுக்கு
அமைந்த சிறப்பு சிலப்பதிகாரத்திற்கு மட்டுமே உண்டு.
சிலப்பதிகாரத்துடன் இணைத்து அடையாளம்
காணப்படுபவர் சிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சிவஞானம் (ம.பொ.சி.) அவர்கள்.
சிலப்பதிகாரத்தின் மீது இவர் கொண்டிருந்த ஆளுமையின் காரணமாக 1950இல்
பேராசிரியர் இரா.பி. சேதுப்பிள்ளை அவர்களால் ‘சிலம்புச் செல்வர்’ என்ற
பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது. சிலப்பதிகாரம் குறித்து இவர் எழுதிய
நூல்களின் எண்ணிக்கை 13. சிலப்பதிகாரத்தைக் கற்றுத் துறை போகிய ம.பொ.சி.
அவர்கள் இந்நூலில், தாம் எழுதிய சிலப்பதிகாரம் குறித்த இலக்கிய ஆய்வுக்
கட்டுரைகள், அவர்தம் ‘செங்கோல்’ இதழில் வெளியான அவரது இலக்கியக் கட்டுரைகள்
பல, பல்வேறு காலங்களில் அவர் ஆற்றிய சிலம்பு குறித்த சொற்பொழிவுகள் சில என
ஒரு 34 கட்டுரைகளைத் தொகுத்து “சிலப்பதிகாரத் திறனாய்வு” என்ற தலைப்பில்
அளித்துள்ளார். இந்நூலை மிகப் பொருத்தமாக, சிலப்பதிகாரத்தின் சிறப்பினை
நிலைநாட்ட எழுநிலை மாடங்களோடு கூடிய புதிய பூம்புகாரை உருவாக்கிய தமிழக
அரசின் முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களுக்குக்
காணிக்கையாக்கி இருக்கிறார் ம.பொ.சி.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment