தொல்காப்பியப் பொருளதிகாரத்தில்
சொல்லப்படும் முல்லை, பாலை, நெய்தல், குறிஞ்சி, மருதம் ஆகிய ஐவகை
நிலங்களில் குறிஞ்சி தவிர்த்த நால்வகை நிலங்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில்
அமைந்துள்ளன. கடலாடி, பரமக்குடி, இராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகள் முல்லை
நிலமாகவும், திருவாடானை வட்டம் மருதநிலமாகவும், சுந்தரபாண்டியன் பட்டினம்
முதல் கன்னிராஜபுரம் வரையிலான கடற்கரைப்பகுதி நெய்தல் நிலமாகவும்கமுதி,
முதுகுளத்தூர், கடலாடியின் சில பகுதிகள் முல்லை திரிந்த பாலை நிலமாகவும்
உள்ளன. இதற்கு ஆதாரமாக ஊர்ப் பெயர்கள், தாவரங்கள், விலங்குகள், நிலஅமைப்பு
ஆகியவற்றைக் கொள்ளலாம்.
மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் இம்மாவட்டம்
கீழ்ச்செம்பில் நாடு, வடதலை செம்பில் நாடு, செவ்விருக்கை நாடு,
முத்தூற்றுக் கூற்றம், வரகுணவளநாடு, அரும்பூர்க் கூற்றம், துகவூர்க்
கூற்றம், களாத்திருக்கை நாடு, இடைக்குளநாடு, ஏழூர் செம்பில் நாடு,
அளற்றுநாடு, சுந்தரபாண்டியவளநாடு, உலகு சிந்தாமணி வளநாடு,
கானப்பேர்க்கூற்றம், கோடிநாடு ஆகிய நாட்டுப் பிரிவுகளில் இருந்துள்ளது.
பாண்டி மண்டலத்தின் ஒரு பகுதியான இம்மாவட்டம், பாண்டியர், சோழர், டில்லி
சுல்தான்கள், விஜயநகர மன்னர்கள், மதுரை நாயக்கர்கள், சேதுபதிகள்,
ஆங்கிலேயர் ஆகியோர்களால் ஆளப்பட்டது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment