பண்டைத் தமிழர் புவியியல், பயிரியல்,
உயிரியல், தொழில் நுட்பவியல் ஆகிய அறிவியல் துறைகளில் மேம்பட்டவர்களாக
விளங்கியுள்ளனர். அவை குறித்த செய்திகள் சங்க இலக்கியங்களில்
காணக்கிடக்கின்றன. அவற்றுள் தொழில் நுட்பவியல் குறித்த செய்திகள் மட்டும்
ஈண்டு ஆய்வுப்பொருளாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. சங்ககாலத் தொழில்
நுட்பவியலுக்கு அக்காலத்து எழுந்த கட்டிடங்கள், அரண்கள், நகரமைப்பு,
கப்பல்கள், போர்கருவிகள் ஆகியன சான்றாக உள்ளன. அவைகள் குறித்த செய்திகளை
ஆராய்ந்து வெளிப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
கட்டிடக்கலை:
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன்
நெடுஞ்செழியனது அரண்மனை திட்டமிடப்பட்டுச் சிற்பநூல் வல்லாரால்
கட்டடப்பெற்றது. மன்றங்கள், நாளோலக்க மண்டபம், படைவீடு, கருவூலம், வழிபடு
தெய்வங்களுக்குரிய கோட்டங்கள், அட்டிற்சாலை, இளவேனில் மண்டபம், பள்ளியறை,
அரசியின் கோயில்மாடம், மாளிகைக் கூடம், கோபுரம், யானைத்தறி, குதிரைக்
கொட்டில், பயிற்சிக்கூடம் முதலான அமைப்புகளுடன் அரண்மனை
அமைக்கப்பட்டிருந்தது. கட்டடக்கலை வல்ல பொறியாளர் நுண்ணிய நூலைப் பிடித்து
மன்னர்கேற்ப அரண்மனை அமைத்துள்ளனர். அரண்மனையைச் சுற்றி மாடங்களும், அவற்றை
வளைத்து மதிலும் கட்டப்பட்டன. வாயிலருகில் கொற்றவை கோயில் கட்டப்பட்டது.
வாயிற்கதவுகளிரண்டிலும் உத்திரம் என்னும் மீனின் பெயர் கொண்ட உத்திரக்
கற்கவியில் இரண்டு குவளை மலர்களைப் போலச் செய்யப்பட்ட கைப்பிடிகள்
செருகப்பட்டன. அவை தாழ்ப்பாளுடன் அமைத்தவை. கைவன்மை மிகுந்த கருமான் பரித்த
இரும்புசிட்டியால் பிணித்துச் செவ்வரக்கிட்டு முடுக்கிச் செய்யப்பட்டதால்
கதவுகள் குற்ற மற்றவையாக இருந்தன.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment