அணுசக்தி அறிவியல், அண்டவெளிப் பயணங்கள்,
விஞ்ஞான மேதைகள் குறித்து கட்டுரைகளும், நூல்களும் பல எழுதி அறிவியல்
தமிழுலகில் தனக்கென ஓர் தனித்த இடத்தைத் தக்கவைத்துக் கொண்ட திரு.
ஜெயபாரதன் அவர்கள் இலக்கியம் படைப்பதில் பன்முகத் திறமை கொண்டவர். கதைகள்,
கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள், படக்கதைகள் என இவர் படைத்தப்
படைப்புகளில் மொழிபெயர்ப்பு இலக்கியங்களுக்கும் தனியிடம் உண்டு.
ரவீந்திரநாத் தாகூர், வால்ட் விட்மன், பெர்ட்ரெண்டு ரஸ்ஸல், எலிஸபெத்
பிரௌனிங், கலீல் கிப்ரான், ஸர் வால்டர் ராலே, ஆஸ்கர் வைல்ட், எமிலி
டிக்கின்ஸன், ரூமி, உமர் கயாம், ஷேக்ஸ்பியர், பெர்னார்ட் ஷா என இவர்
மொழிபெயர்த்த இந்திய மற்றும் அயல்நாட்டு அறிஞர்களின் பட்டியல் நீளம்.
அவ்வாறே இவர் எழுதிய நாடகங்களின் பட்டியலும் சீதாயணம், ஆப்ரஹாம் லிங்கன்,
நெப்போலியன், சாக்ரடிஸ், ஸாலமி, ஜோன் ஆஃப் ஆர்க், கிளியோ பாட்ரா, ஒத்தலோ
என்ற படைப்புகளை உள்ளடக்கிய மற்றுமொரு நீண்ட பட்டியலே.
இப்பட்டியல்களில் மேலும் ஒன்றாக இம்முறை
இடம் பிடிப்பது, இவர் தமிழாக்கம் செய்துள்ள “மனிதன் & உன்னத மனிதன்”
(Man & Superman) என்ற தலைப்பில், 1903 ஆம் ஆண்டில் அறிஞர் பெர்னார்ட்
ஷா எழுதிய நாடகம். “உன்னத மனிதன்” என்ற இந்த நாடகம், பிரபல மேற்கத்திய
கதைகளின் நாயகனாக, பெண்களை மயக்கி தனது வலையில் வீழ்த்துபவனாகக்
காட்டப்படும் “டான் வான்” (Don Juan) என்ற கதாப்பாத்திரத்தினை ஜியார்ஜ்
பெர்னார்ட் ஷாவும் கையாண்டு, சமூகம் பற்றிய தனது கருத்துகளை வெளிப்படுத்த
எழுதிய நான்கு அங்க நாடகம். இதன் மூன்றாம் அங்கம் நரகத்தில் நடப்பதாகக்
காட்டப்படுவது. இந்தப்பகுதியில் சாத்தான் வாயிலாகவும் கூட சமூகத்தைப்
பற்றிய தமது கருத்தை, “மனிதன் ஒரு பெரும் படைப்பாளி கடவுள்போல்! என்ன
படைத்திருக்கிறான்? உள்ளே வைத்திருப்பவை: கழுவேற்றும் முனை! கம்பத்தில்
கட்டி எரிப்பது! தூக்கு மேடை! மின்னதிர்ச்சி நாற்காலி! நச்சு வாயு! ஆனால்
வெளியே காது குளிர முழக்குவது: கடமை! நீதி நெறி! தேசப்பற்று! அத்தனையும்
வேடம்!” என்று வெளிப்படுத்துகிறார் பெர்னார்ட் ஷா.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.