கருவில் இருக்கும் குழந்தை நோயோடு மண்ணிற்கு வருகின்ற சூழலில் நமது
வாழ்க்கை முறையுள்ளது. நம் ஆதிப்பண்பாட்டின் அழித்தொழிப்பினால், ஐம்பது
வயதைக் கடந்து செல்வது இன்று அரிதாகிவிட்டது. கல்வியில் தொடங்கி உண்ணும்
உணவு வரை வெள்ளையினப் பண்பாடே நம்மை ஆட்கொண்டுள்ளது. இந்தியக் கண்டத்தை
ஐரோப்பியர்கள் தங்களுக்குரியதாகத் தகவமைத்துக் கொண்டதன் விளைவு சொந்த
மண்ணில் சுகமற்று வாழ்ந்து வருகிறோம். உலகிற்கு நோய் நொடியின்றி நூறாண்டு
காலம் வாழ்வதற்கான விதிகளைக் கற்றுக் கொடுத்த தமிழினம் சுகாதாரமற்ற
விளிம்பிற்குச் சென்றுகொண்டிருக்கிற அவலநிலையின் வெளிப்பாடுதான் இயற்கையைப்
புறந்தள்ளுதலின் அறியாமை. இரண்டாயிரம் ஆண்டுக்காலத் தொன்மையுடைய
தமிழர்களின் சூழலியல் சார்ந்த வாழ்வியல் முறைகள் குறித்து சங்கத்
திணைக்கவிதைகள் வழி அறியமுடிகின்றன. எனவேதான், இச்சங்க காலத்தை ‘இயற்கை
நெறிக்காலம்’ என வரையறை செய்துள்ளனர். ஐவகை நிலப்பகுப்பும் நிலத்திற்கானச்
சூழல் தகவமைவும், சூழல் சார்ந்த மாந்தர் வாழ்வியலும் சார்ந்த திணைமவியல்
கோட்பாட்டுச் சூழல் கட்டமைப்பில்தான் தமிழர்கள் வாழ்ந்துள்ளனர். இந்நிலம்
தவிர்த்து பிறதேசத்து செல்வாக்கினை தமிழர்கள் வாழவிரும்பாத காலம்தான்
திணைமவியல்காலம்.
தமிழ் நிலத்தை வரையறை செய்துள்ள கருத்தைத்
தொல்காப்பியத்தின் சிறப்புப் பாயிரம் “வடவேங்கடம் தென்குமரி ஆஇடைத் தமிழ்
கூறும் நல் உலகத்து” வழி அறியலாகிறது. “ஓர் இனத்தின் வாழ்க்கைமுறையும்
நம்பிக்கைகளும், குணநலன்களும், பண்பாட்டுக்கூறுகளும், அந்த இனம்
சார்ந்திருக்கும் நிலத்தன்மை, தட்பவெட்பநிலை ஆகியவற்றின் பின்னணியில்தான்
அமையும் என குரோஸ் ஹோட்ஜ் எனும் நிலவியல் அறிஞர் கூறுகிறார். தமிழர்களுக்கு
இக்கருத்து பொருத்தமாக அமைந்துள்ளது. திணைமவியல் சூழலில் பயிர்விக்கப்பட்ட
உணவுப் பயிர்கள், உழவுமுறைகள், பயிர்அறுவடை, பயிர்க்காவல் முறை ஆகியன
குறித்த பதிவுகள் திணைக்கவிதைகளில் காணக்கிடைக்கின்றன. திணைக்கட்டமைப்பில்
முதன்மையாக அமைந்த குறிஞ்சி நிலமே வேளாண்மையின் தோற்றுவாயாக இருந்திருக்க
முடியும். நாகரிக வளர்ச்சியின் விளைவாக நீர் மேலாண்மை உருவாக்கத்தில்
மருதம் உதயமாயிருக்க வேண்டும்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment