பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான
“ஆசாரக்கோவை” (இதற்கு ‘ஒழுக்கங்களின் தொகுதி’ என்பது பொருள்) என்னும் நூல்
‘பெருவாயின் முள்ளியார்’ என்ற புலவரால் பாடப்பட்டது. கடைச்சங்க மருவிய
காலத்து நூல்களுள் ஒன்று ஆசாரக்கோவை. நூலின் தற்சிறப்புப் பாயிரத்தால்,
அப்பாடலின் கருத்தினைக் கொண்டு இவர் சைவசமயத்தைச் சார்ந்தவர் என்பது
பெறப்படுகிறது. மேலும், பாயிரம் மூலம் இந்நூலுக்கு மூலநூல் ஆரிடம் என்னும்
வடநூலெனவும் தெரிகிறது. இந்நூல் தொகுக்கும் ஆசாரங்கள் யாவும் சுக்ர
ஸ்மிருதி நூலின் பாடல்கள் என்று வடமொழிப் புலவர் கூறுகின்றனர் என்பதாக தி.
செல்வக்கேசவராய முதலியார் கூறுகிறார். ஆனால், பேராசிரியர் எஸ். வையாபுரிப்
பிள்ளை அவரது ‘தமிழ் இலக்கிய வரலாறு’ நூலில், ஆபஸ்தம்ப கிருஹ்யசூத்திரம்,
ஆபஸ்தம்ப தர்ம சூத்திரம், போதாயனதர்ம சூத்திரம், கௌதம சூத்திரம், விஷ்ணு
தர்ம சூத்திரம், வசிஷ்ட தர்ம சூத்திரம், மனு ஸ்மிருதி, உசனஸ ஸம்ஹிதா, ஸங்க
ஸ்மிருதி, லகு ஹாரித ஸ்மிருதி ஆகிய பல நூல்கள் இந்நூலுக்கு அடிப்படையாய்
அமைந்துள்ளன எனக்குறிப்பிடுவார்.
சிறப்புப் பாயிரம்:
ஆர் எயில் மூன்றும் அழித்தான் அடி ஏத்தி,
ஆரிடத்துத் தான் அறிந்த மாத்திரையான், ஆசாரம்
யாரும் அறிய, அறன் ஆய மற்றவற்றை
ஆசாரக்கோவை எனத் தொகுத்தான்-தீராத்
திரு வாயில் ஆய, திறல் வண், கயத்தூர்ப்
பெருவாயின் முள்ளி என்பான்.
வெண்பா பாடல்களாக அமைந்த ஆசாரக்கோவை
நூலின் 100 பாடல்களில் மக்கள் வாழ்க்கையில் பின்பற்றப்படவேண்டிய ஒழுக்க
நெறிகள் (ஆசாரங்கள்) எவையெவை எனக் கூறப்படுகின்றன. உண்ணல், உடுத்தல்,
உறங்கல், நீராடல் போன்ற நடைமுறை வாழ்க்கைக் கூறுகள் முதற்கொண்டு, யாரிடம்
எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ன செய்யவேண்டும் போன்ற வழிமுறைகளும்
சொல்லப்பட்டுள்ளன. சுருக்கமாக அகத்தூய்மை புறத்தூய்மை என இரண்டுக்கும்
வழிகாட்டும் முயற்சி எனக் கொள்ளலாம். எவை செய்தல் நன்மையுண்டாக்கும்,
எவற்றைச் செய்தால் தீமைகள் நேரும் என்பதை விளக்குவது நூலின் நோக்கம். இவை
எல்லாம் முன்னோர் கண்ட ஒழுக்க நெறிகளே என்பதை இந்நூலாசிரியரின்
கீழ்க்காணும் ‘யாவரும் கண்ட நெறி’ (16) ‘மிக்கவர்கண்ட நெறி’ (27), ‘நல்
அறிவாளர் துணிவு’ (17), ‘பேர் அறிவாளர்துணிவு (19), ‘நூல் முறையாளர்
துணிவு’ (61) என்ற வரிகளின் மூலம் கூறுகிறார்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment