அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வடமொழிப்
பேராசிரியராகப் பணியாற்றிய பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரியார் (Dr. P.S.
Subrahmanya Sastri-பின்னங்குடி சாமிநாத சுப்பிரமணிய சாஸ்திரி) அவர்கள் ஒரு
பன்மொழி அறிஞர். தமிழிற்கும் வடமொழிக்கும் இலக்கியப்பணிகள் பல ஆற்றியவர்.
தமிழிலக்கணப் பணியும் மொழிநூற் பணியும் செய்த இவர் தொல்காப்பியத்தை முதலில்
ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். “சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதி”
உருவானதிலும் இவருக்குப் பெரும் பங்கு உண்டு. இவரது சிறந்த மொழியியற்
புலமையையும், மொழியிலக்கண அறிவையும், ஒப்பியல் ஆய்வுத் திறமையையும், கண்டு
வியந்து இவரது பெயரான பி.சா. சுப்பிரமணியம் என்பதன் சுருக்கமாக, செல்லமாக
“பிசாசு” என்றும் அழைக்கப்பட்டார் (இவரை குறித்து “தமிழாய்வில் முதலில்
முனைவர் பட்டம் பெற்றவர்” – http://siragu.com/தமிழாய்வில்-முதலில்-முனை/ –
என்ற சிறகு கட்டுரை வழியாக மேலும் அறியலாம்). உரையாசிரியராகவும்,
மொழிபெயர்ப்பாளராகவும் பலநூல்கள் எழுதிய இவருக்கு, சென்னைப்
பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை ஆய்வில் “முதல் முனைவர் பட்டம் பெற்றவர்”
(1930 ஆம் ஆண்டு) என்ற பெருமையும் உண்டு. தமிழ் இலக்கணக்கொள்கை வரலாறும்
அதன் வடமொழி இலக்கண உறவும் என்ற தலைப்பில் முனைவர்ப்பட்ட ஆய்வேட்டை
எழுதினர்.
சமஸ்கிருத இலக்கிய வரலாறு, சமஸ்கிருத இலக்கண வரலாறு ஆகியவற்றைத்
தமிழில் எழுதியுள்ளார். இவரது தொல்காப்பிய ஆய்வில் வடமொழி சார்பின் தாக்கம்
அதிகம் என்ற கருத்துகளும் அக்காலத்தில் தமிழறிஞரிடையே இருந்தன. தொடர்ந்து
“தொல்காப்பிய சொல்லதிகாரக் குறிப்பு” என்ற இவரது நூல் சென்னைப் பல்கலைக்கழக
தமிழ் வித்துவான் பாடநூலாகத் தேர்வு செய்யப்பட்ட பொழுது விவாதங்கள்
வெடித்தன. தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்தைச் சார்ந்த தமிழறிஞர்கள்
அவர்களின் திங்கள் இதழான தமிழ்ப் பொழில் மூலம் பல மறுப்புக் கட்டுரைகளை,
மாற்றுக் கருத்துகளை, விளக்கங்களைத் தொடர்ந்து 6 ஆண்டுகள் பதிவு செய்து
வந்தனர் என்பது சென்ற நூற்றாண்டின் தமிழ் வரலாற்றின் ஒரு பகுதி.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment