சங்கம் மருவிய காலத்துப்
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான ‘இன்னா நாற்பது’ என்பது மக்களை
நல்வழிப்படுத்தும் அறவுரைகளை 40 வெண்பாக்களில் வடித்துக் கொடுக்கும் ஓர்
சிறிய நூலாகும். இவற்றுடன் துவக்கத்தில் ஒரு கடவுள் வாழ்த்துப் பாடலும்
உண்டு. அப்பாடல் வைதிக சமயத்துக் கடவுளரான சிவன், பலராமன், திருமால்,
முருகன் ஆகிய கடவுளரைத் தொழவேண்டும் என்ற கருத்தை உரைக்கின்றது. இப்பாடல்
தவிர்த்து இறை என்னும் பொருள் குறித்தவையாகவோ இறைவழிபாடு, கடவுள், தெய்வம்,
இம்மை, மறுமை, ஆன்மா போன்ற சமயக் கருத்துக்களோ நூலெங்கிலும்
காணப்படவில்லை. கடவுள் வாழ்த்தைத் தவிர்த்து, அறம் வலியுறுத்தும் நோக்கம்
கொண்ட மற்ற 40 பாடல்களிலும் இறை நம்பிக்கை குறித்தும், நல்வழி நடத்தல்
என்பதே மறுமையின் நல்வாழ்வுக்கு என்ற கருத்தும் காணப் பெறாததால் இக் கடவுள்
வாழ்த்துப் பாடல் பிற்கால இடைச்செருகல் எனக் கருத வழியுண்டு.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் 40 என்ற
தொகை நூல்கள் என்ற சிறப்பைப் பெறுவன இன்னா நாற்பது, இனியவை நாற்பது,
கார்நாற்பது, களவழி நாற்பது என்ற நான்கு நூல்கள் மட்டுமே. இவற்றுள் இன்னா
நாற்பதும் இனியவை நாற்பதும் அறநூல்களாக மக்களை வாழ்வில் நெறிப்படுத்தும்
கருத்துகளைக் கொண்டவை. இன்னா நாற்பது வாழ்வில் எவையெவை துன்பம் தருவன
என்பவற்றை ‘இன்னாதவை’ எனக் குறிப்பிட்டுச் செல்கிறது. இன்னாதவை என்பவை
பாடலின் பொருளுக்கேற்ப ‘இனிமையற்றவை’ எனவோ அல்லது ‘தகுதியற்றவை’ எனவோ
அல்லது ‘பயனற்றவை’ எனவோ பொருள் கொண்டு அமையும். இதற்கு மாறாக வாழ்வின்
‘இனியவை’ எவை என்று கூறி அறநெறியை வலியுறுத்துவது இனியவை நாற்பது.
இவையிரண்டையும் தவிர்த்து கார்நாற்பதும், களவழி நாற்பதும் முறையே தமிழுக்கே
உரிய ‘அகம்’ ‘புறம்’ என்ற திணைகளைக் கருப்பொருளாகக் கொண்டவை.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment