தொலைக்காட்சிப்பெட்டியின்
மற்றொரு பெயர் ‘இடியட் பாக்ஸ்’ – முட்டாள்(களின்) பெட்டி. முட்டாள்கள்
தினத்தில் மட்டுமல்லாமல் தினம்தோறும் மக்களை முட்டாள்களாக்கிக்
கொண்டிருக்கும் பல்வேறு தொழில்நுட்ப நுகர்வு சாதனங்களில் ஒன்றுதான்
தொலைக்காட்சிப்பெட்டி. பொழுதுபோக்கு என்றும் செய்திகள் என்றும் நம்
வீட்டின் வரவேற்பறையில் குப்பைகளை அள்ளி நிறைத்துக்கொண்டிருக்கும் சாதனம்.
கூடவே நம் மூளைகளிலும்! அந்தப் பெட்டியின் திரையில், வீட்டுக்கூடத்தின்
நடுவில் நிகழ்ந்து கொண்டிருப்பது, பெரும்பாலும் நாம் ரகசியம் என்றும்
கெட்டவை என்றும் ஒதுக்கி வைத்திருக்கும் வக்கிரங்கள் – வன்முறை,
புறம்பேசுதல், அறமீறல்கள், அத்து மீறல்கள், பாலியல் வெளிப்படுத்தல்கள்!
பொழுதுபோக்கு என்னும் பெயரில் வீட்டுக்கூடத்தில், அனைத்து உறவுகளின் கூட்டு
அமர்வின் முன் நிகழ்வதால் அவற்றை மனதுக்குள் ஏற்றும் தடை விலகி விடுகிறது.
வக்கிரங்கள் எனக்கருதுவதால், பார்ப்பவற்றை ஈடுபாட்டுடன் செயல்படுத்த
முடியாமல் ஆசைகளாக மனதின் ஆழங்களுக்குள் புதைத்து வைக்கப்படுகிறது.
புதையலின் அழுத்தம் அதிகரிக்கும்போது வெடித்து விடும்! அதே நேரத்தில்
தொலைக்காட்சிப்பெட்டி, சுய உணர்வுடன் உபயோகிப்பவர்களின் அறிவுக்குத் தீனி
போடும் சாதனம் கூட. அதை ‘இடியட் பாக்ஸ்’ என அழைப்பது, தொழில்நுட்பத்தின்
மூலம் நம்மை வந்தடைந்திருக்கும் தொலைக்காட்சிப்பெட்டியை அவமதிப்பது ஆகலாம்.
உண்மையில் அதை உபயோகிக்கும் நாம் முட்டாள்களா இல்லையா என்பதைப்
பொறுத்துதான், அதன் குணம் அமையும் – கண்ணாடியில் பதிந்திருக்கும் அழுக்கு,
அது எதிரொளிக்கும் காட்சியில் படிவது போல!
எந்த தொழில்நுட்பத்துக்கும் மூலக்காரணம்,
மனிதனின் மூளையில் இயற்கை விதிகள் ஏற்படுத்தும் ஒரு தூண்டுதல். அந்தத்
தூண்டுதல் அளிக்கும் அறிதல். தொலைக்காட்சியை உருவாக்குவதற்கான
ஆராய்ச்சியின் முதல் கட்டம் செலினியம் என்னும் தனிமத்தின் குணமான, ஒளி
பட்டால் எலெக்ட்ரான்களை வெளியிடும் தன்மையை மனிதன் கண்டறிந்ததுதான். இந்தக்
கண்டுபிடிப்பு 1873-ம் ஆண்டு நிகழ்ந்தது. செலினியம் என்னும் தனிமத்தில்
ஒளி படும்போது, அந்த ஒளியின் தன்மைக்கேற்ற மின் சமிக்ஞ்சையை (Signal)
வெளியிடுகிறது. இதுவே ஆரம்பக்கட்ட தொலைக்காட்சி கேமராக்களின் தொழில்
நுட்பம்.
ரேடியோ அலைகள் மூலம் ஒலியலைகளை 1906-ம்
ஆண்டு அலைபரப்பு செய்திருக்கிறார்கள். அதன்பின் 1920-களின் நடுவில்,
படங்களை ரேடியோ அலைகள் மூலம் அனுப்ப தீவிரமான முயற்சிகள்
நடைபெற்றிருக்கின்றன. அதாவது தொலைக்காட்சியின் வயது 100 ஆண்டுகளை இன்னும்
தொடவில்லை. ஆனால் தொலைக்காட்சி தொழில்நுட்பம் மிக வேகமான வளர்ச்சியை
அடைந்துள்ளது. கடந்த 10 வருடங்களில் அதீத வேகத்தில் வளர்ந்திருக்கிறது.
இன்னும் வளர்ந்து கொண்டிருக்கிறது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.