என்
நண்பன் ஒருவன் திருமணம். ஆண்டு 1970, அவனுக்கு ஒரு நாவலைத் திருமணப்
பரிசாக அளித்தேன். அது நல்ல இசைவான திருமண வாழ்க்கையை வலியுறுத்துகின்ற ஒரு
நாவல். பெயர் ‘வாடா மலர்’. அறிஞர் மு. வ. எழுதிய கடைசி நாவல் அது என்று
நினைக்கிறேன். பொருத்தம் உண்டோ இல்லையோ அந்தக் காலத்தில் இப்படித்தான்
நாங்களும் எங்களைப் போன்ற இளைஞர்களும் மு. வரதராசனாரின் நாவல்களைப் பரிசாக
வழங்கினோம். அப்படி அவர் எழுத்தின்மேல் ஒரு பிடிப்பு. (இதே போல் நா.
பார்த்தசாரதி மேலும் பிடிப்பு இருந்தது. அது பற்றி வேறொரு சமயம்.)
தனிப்பட்ட
முறையில் எனக்கு மு. வ. மேல் பிடிப்பு உண்டாகக் காரணம், என் தாயார்தான்.
அவர் மு.வ.வின் அத்தனை கதைகளையும் ‘கரைத்துக் குடித்தவர்’. குறிப்பாகப்
‘பெற்ற மனம்’ நாவல் அவருக்கு மிகவும் பிடிக்கும். மு. வ. வைப் பற்றி
இளமையிலேயே எனக்கு எடுத்துரைத்தவர். பலரும் மு. வ. திருப்பத்தூரில்
பிறந்ததாகச் சொல்லியிருக்கிறார்கள். பிறர் அவர் சோளிங்கபுரத்தில்
(சுருக்கமாகச் ‘சோளிங்கர்’) பிறந்ததாகவும் எழுதியிருக்கிறார்கள். இரண்டுமே
தவறு. இராணிப்பேட்டையிலிருந்து சோளிங்கர் செல்லும் வழியிலுள்ள வேலம் என்பது
அவருடைய சொந்த கிராமம். அங்குதான் அவர் பிறந்ததாக என் தாயார்
சொல்லியிருக்கிறார். முதலியார் வகுப்பைச் சேர்ந்தவர். நானும் என்
நண்பர்களும்கூட சோளிங்கரில் தமிழ்ச் சங்கம் வைத்திருந்தோம். என் ஊர்
ஆர்க்காடு. வேலத்தைக் கடந்துசெல்லாமல் சோளிங்கர் செல்லமுடியாது. (இந்த
இடங்கள் பற்றியெல்லாம் ‘அகல் விளக்கு’ நாவலில் குறிப்பு வருகிறது என்று
நினைக்கிறேன்.)
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment