நூலும் நூலாசிரியரும்:
வலங்கை இடங்கை சாதிகளுக்கு இடையே நிகழ்ந்த
கலவரங்கள் வெறும் சாதி மோதல்கள் அல்ல, அவை வர்க்கப் போராட்டங்கள்.
உழைக்கும் இனத்தோர் தங்களுக்கு எதிராகக் கிளர்ந்து எழாதவாறு அரசர்களும்,
உயர் குலத்தவராகக் கருதப்பட்டோரும் உழைப்பை முதன்மையாகக் கொண்டு
வாழ்ந்தோரைப் பிரித்தாண்டு அவர்களுக்குள் மோதவிட்டு தங்கள் நிலையைக்
காப்பாற்றிக்கொள்ள எடுத்த நடவடிக்கைகள் என்று தனது “தமிழ்நாட்டில் சாதி
சமத்துவப் போராட்டக் கருத்துகள்” என்ற நூலில் விளக்குகிறார் பேராசிரியர்
நா. வானமாமலை. கலை, இலக்கியம், மதிப்பீடு, பண்பாடு, வரலாறு, தத்துவம்,
மானிடவியல், நாட்டுப் பண்பாட்டியல் எனப் பல துறைகளிலும் பண்பட்ட
ஆய்வாளரும், தமிழர் நாட்டார் வழக்காற்றியல் முதன்மை ஆராய்ச்சியாளர்களில்
ஒருவரான தமிழறிஞர் நா. வானமாமலை அவர்களின் இரு கட்டுரைகள் அடங்கிய மிகச்
சிறு நூல் இது. நாட்டுடைமையாக்கப்பட்ட இவரது நூல்கள் தமிழ் இணையக்
கல்விக்கழகத்தின் வழியாக படிப்பதற்குக் கிடைக்கின்றன.
செல்வச் செழிப்புள்ள நிலவுடைமை வேளாளர்
வர்க்கமும், வணிகர் வர்க்கமும் முறையே வலம் இடம் எனப் பிரிந்து கொண்டு,
அவரவர் தொழில் சார்ந்த உழைக்கும் மக்கள் வர்க்கத்தினரைத் தத்தம் பிரிவில்
இணைத்துக் கொண்டு, ஒருவரை ஒருவர் எதிர்த்து வந்தனர் என்கிறார் நூலாசிரியர்.
மேலோட்டமாக நாம் அறிந்திருக்கும் வலங்கை இடங்கை சாதிப் பிரிவினை என்ற
வேறுபாட்டை ஊடுருவி ஆய்வு செய்துள்ளார். பொருள்முதல்வாத அடிப்படையில்,
உற்பத்தி உறவுகளின் அடிப்படையில், ‘தமிழ்நாட்டில் சாதி சமத்துவ போராட்ட
கருத்துகள்’ மற்றும் ‘தமிழ்மன்னரும் சாதிப்பிரிவினைகளும்’ எனும் இரு
கட்டுரைகளின் மூலம் இந்நூலில் விளக்குகிறார் நா. வானமாமலை. தமிழ்நாட்டில்
சாதி சமத்துவ ஆய்வில், குறிப்பாக வலங்கை இடங்கை சாதிப் போராட்டங்களின்
ஆணிவேர் குறித்து ஆய்வு செய்ய விரும்பும் எவரொருவருக்கும் நா. வானமாமலை
குறிப்பிடும் தகவல்கள் விரிந்த ஒரு பார்வையை வழங்கும் என்பது திண்ணம். தி.
நா. சுப்பிரமணியன் தொகுத்த தென்னிந்தியக் கோயில் சாசனங்கள் மூன்றாவது
தொகுப்பு, பேராசிரியர் கே. கே. பிள்ளையின் தென்னிந்திய வரலாறு போன்ற
நூல்களில் இருந்து வரலாறு தொல்லியல் சான்றுகளையும் தருகிறார் நூலாசிரியர்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.