‘விழித்தெழுக என் தேசம்’ என்ற
உணர்ச்சிகரமான முழக்கத்தைத் தலைப்பாகக் கொண்டு தமிழாக்கம் செய்யப்பட்டக்
கவிதைகளையும், தனது எண்ணத்தில் தோன்றிய கருத்துகளின் வெளிப்பாடாக
எழுதப்பட்ட கவிதைகளையும் ஒரு கவிதைத் தொகுப்பாக அளித்துள்ளார் கவிஞர் சி.
ஜெயபாரதன் அவர்கள். இவர் அணுமின்சக்தித் துறையில் பணியாற்றிய பொறியியல்
வல்லுநர் என்பதும், வானவியல், அண்டவெளிப் பயணக்கட்டுரைகள், அறிவியல்
அறிஞர்கள் குறித்து அதிகம் எழுதும் அறிவியலாளர் என்பதுடன் அவர் கவிதைகள்,
நாடகங்கள், கதைகள் எனப் பிற படைப்புகளையும் வழங்கியவர் என்பதை இந்நாளில்
பலர் அறிவர். மேலும் இவர் அறிவியல் கருத்துக்களை கவிதை வழி காட்டப்படுவதில்
முன்னணியில் இருக்கும் அறிவியல் கவிஞரும் ஆவார். ஏன்! சொல்லப்போனால்,
திரு. ஜெயபாரதன் அவரது அறிவியல் கட்டுரைகளையே கவிதைகளுடன்தான் தொடக்குவார்.
இக்கவிதை நூலில் படிக்கும் முன்னரே இதில்
இடம் பெற்றுள்ள கவிதைகள் சிலவற்றை அவை இணைய இதழ்களில் வெளியானபொழுதே நான்
படித்த நினைவும் உண்டு. அவரது பிற அறிவியல் நூல்களில் அறிவியல் கவிதைகளை
படித்த என் எதிர்பார்ப்பில், நான் எதிர்பார்த்த அளவில் அறிவியல் குறித்த
கவிதைகள் இந்நூலில் இடம் பெறவில்லை என்பதில் எனக்குச் சற்று ஏமாற்றமே.
திரு. ஜெயபாரதனின் படைப்புகளைக் கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து படித்து
வந்திருக்கும் நான் அவரது கருத்துகளும் சிந்தனையின் வெளிப்பாடும்
பெரும்பாலும் அறிவியல், இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பதில்
அக்கறை, சமூக அக்கறை, பெண்ணியம், சமகால நிகழ்வுகள் குறித்த உணர்வுகளின்
வெளிப்பாடு, வாழ்வு குறித்த தத்துவக் கருத்துகள், வாழுமிடம், தாய்நாடு,
தாய்மொழி மீது கொண்ட பற்று ஆகியவற்றைச் சுற்றிச் சுழன்று வருவதையே கவனித்து
வந்துள்ளேன். இந்நூலில் உள்ள கவிதைகளின் தொகுப்பும் அச்சிந்தனைகளின் பல
பரிமாணங்களைத்தான் தொகுத்து வழங்கியுள்ளது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment