நூலும் நூலாசிரியரும்:
படைப்பாளரும் பத்திரிக்கையாளருமான மீ. ப.
சோமசுந்தரம் (மீ. ப. சோமு, 1921 – 1999) அகில இந்திய வானொலியில்
பணியாற்றியவர். “அக்கரைச் சீமையிலே” என்ற பயண நூலுக்குச் சாகித்திய அகாதெமி
பரிசுடன், படைப்பிலக்கியத்திற்காக மேலும் பல பரிசுகளும் பெற்ற
இலக்கியவாதி. கல்கி இதழின் ஆசிரியராக இரு ஆண்டுகள் (1954-1956)
பொறுப்பேற்றதுடன், நண்பன் என்ற இதழையும் தொடங்கி நடத்தினார். கட்டுரை,
ஆய்வுக்கட்டுரை, பயணக்கட்டுரை, புதினம், சிறுகதை, நாடகம், கவிதை, சித்தர்
இலக்கியம் (ஆய்வு நூல்) என இலக்கியத்தின் பல துறைகளிலும் தனது
எழுத்தாற்றலைப் பயன்படுத்தியதுடன் சொற்பொழிவாளராகவும் இருந்துள்ளார். இவரது
புகழ்பெற்ற புதினம் ரவிசந்திரிகா.
‘சர்ப்ப கந்தி’ என்ற மூலிகை பாம்பின்
நச்சு முறிவுக்கான மருந்து, அது மனநோய்க்கும் ஒரு மருந்து, அதற்கு
‘சந்திரிகா’ என்ற பெயருமுண்டு என்ற தகவலுடன் நூல் துவங்குகிறது. கதையின்
நாயகி சந்திரிகா அவளது நாட்டிய ஆசிரியரான புல்லாங்குழல் கலைஞர்
ரவீந்திரனுக்கு மன ஆறுதல் தந்து, அவனது வாழ்வுக்கு நிலவாக ஒளி கொடுத்தாள்
என்று கதை குறித்த அறிமுகம் கொடுக்கப்படுகிறது. கதை மலைக்கோட்டையில் அவளது
நாட்டிய அரங்கேற்றத்துடன் தொடங்குகிறது. அவளுக்கு விழாவில் பரிசளிக்கத்
தனது புல்லாங்குழலை அடைமானம் வைத்து பரிசு வாங்குகிறார் அவளது ஆசிரியர்
ரவீந்திரன். கதையின் நோக்கம் கலைக்கும் கலைஞர்களின் வாழ்வுக்கும்
முக்கியத்துவம் கொடுக்க விரும்புவது என்பது தெளிவு. ரவிசந்திரிகா என்ற
ராகமும் ஒன்று உண்டு. வானதி பதிப்பகம் வெளியிட்ட (நான்காம் பதிப்பு -1989)
இந்த நூலின் முதல் அத்தியாயம் ‘மலைக்கோட்டை’ என்று துவங்கி, 45 ஆவது
அத்தியாயமாக ‘மங்களம்’ என்ற தலைப்புடன் மங்களம் பாடி முடிக்கப்படும் இந்த
நூலின் பக்கங்கள் 500க்கும் மேல் விரிகிறது. முதல் பதிப்பு எப்பொழுது என்ற
குறிப்பில்லை. இக்கதை அக்காலத்தில் கல்கியில் தொடராக வந்ததாக அறிய
முடிகிறது. மேலும், இது மிகவும் வரவேற்கப்பட்ட கதை என்பதால் தொலைக்காட்சித்
தொடராகவும் வெளிவந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.