உலகிலேயே மக்கள்தொகையின் அடிப்படையில்,
மிகப்பெரிய சனநாயக நாடு, நம்முடைய நாடு இந்தியா என்பதில் நாம் அனைவரும்
பெருமை கொள்ளல் வேண்டும். இந்த 2019 – ஆம் ஆண்டு, 17 – வது மக்களவை பொதுத்
தேர்தல் நடைபெறப்போகிறது. அத்தகைய சிறப்புமிக்க இத்தேர்தலை நாம்
பெருமையுடன் சந்திக்க இருக்கிறோம். இந்தியா விடுதலைப்பெற்று முதல்
தேர்தலின் போது, உலகத்தின் பார்வை நம்மீது பரவலாகக் காணப்பட்டது. அப்போதே,
எவ்வித கட்டமைப்பும் இன்றி, ஊடக வசதிகளின்றி நாம் வெற்றிகரமாக தேர்தலை
நடத்தி, மக்களவை உருவாக்கி மிகச்சிறந்த சனநாயக நாடு என்பதை
மெய்ப்பித்திருக்கிறோம். இதற்காக நாம் ஒவ்வொருவரும் இந்தியன் என்ற வகையில்
பெருமைகொள்ள கடமைப்பட்டிருக்கிறோம்.
நடந்து முடிந்திருக்கும் 16 மக்களவைத்
தேர்தல்களும், சில குறைகள் இருந்தாலும், பல நிறைகளோடு மிக நன்றாகவே
நடந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இம்முறை 2019 மக்களவைத்
தேர்தல், மக்களின் மனதில், சிறிது ஐயத்தை கொடுத்திருக்கிறது என்பது
வருந்தத்தக்க உண்மை. ஏனென்றால், இந்திய தேர்தல் ஆணையம் என்பது தன்னாட்சி
பெற்ற ஒரு அமைப்பு. இதில் மத்திய அரசோ, மாநில அரசுகளோ எந்த விதத்திலும்
குறுக்கீடு செய்ய முடியாது என்பது தான் அதனுடைய முக்கியத்துவம் வாய்ந்த
சிறப்பாகும். ஆனால் 2014 மக்களவைத் தேர்தலுக்கு பிறகு, பா.ச.க மோடியின்
ஆட்சியில், பல குற்றசாட்டுகள் எழுகின்றன. தமிழ்நாட்டில் கடந்த இரு
ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இடைத்தேர்தலில், பல குற்றசாட்டுகள்
வைக்கப்பட்டன. பணப்பட்டுவாடா நடக்கிறது என்று தேர்தல் தேதியையே
தள்ளிவைக்கக் கூடியளவிற்கு புகார்கள் குவிந்தன. வருமானவரி சோதனைகள்,
அ.தி.மு.க அமைச்சர் வீட்டிலேயே நடந்தது. இன்னும் பல இடங்களில் சோதனைகள்
நடந்தன. மூன்று கண்டெய்னர் லாரிகளில் 560 கோடி ரூபாய் பணம் பறிமுதல்
செய்யப்பட்டது. அது யாருடைய பணம் என்றே தெரியாத நிலையில், நீண்ட
இடைவெளிக்கு பிறகு பாரத வங்கி தங்களுடையது என்று கூறியது. அ.தி.மு.க
அமைச்சர்களின், எம்.எல்.ஏ-க்களின் வீடுகளிலும், அவர்களின் பினாமி
வீடுகளிலும் கோடிக்கணக்கான பணம் கைப்பற்றப்பட்டது. இருப்பினும் அவைகள்
பற்றி எந்த தகவலும் அதன்பிறகு வரவில்லை. விசாரிக்கப்படவுமில்லை. அதற்கான
நடவடிக்கைகள் எதுவும் எடுத்ததாகவும் தெரியவில்லை!
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment