Monday, 23 November 2015

சென்னை ஏன் நீரில் மூழ்கி தத்தளிக்கிறது? ஊழலும் திறமையின்மையுமே முழுமுதற்காரணம்

chennai thaththalikkiradhu5
உங்களில் பெரும்பாலானோர் சமீபத்தில் பெய்த பெருமழை ஏற்படுத்திய விளைவுகள் குறித்து அறிந்திருப்பீர்கள். ஏறக்குறைய 120 பேர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான ஏழைமக்கள் உடைமைகளையும் பொருட்களையும் இழந்துள்ளனர். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான உழைக்குந் திறன் வீணாகியுள்ளது. ஏராளமானோர் பல்வேறு வழிகளில் துன்பப்படுகின்றனர். நகரம் முழுவதும் சேறும், சகதியும், அழுக்கும் காணப்படுகிறது. வழக்கம்போல ஏழை மக்களும் நடுத்தர வர்க்கத்தினரும் இயற்கையின் சீற்றத்திற்கு பலிகடாவாகியுள்ளனர்.
இவ்வளவு கொடூரமான விளைவுகளை நாம் சந்திக்கும் அளவிற்கு இந்த மழை என்ன அவ்வளவு பெரிதா?
திடீரெனவும், முற்றிலும் எதிர்பாராத விதமாகவும் மிகப்பெரிய கனமழையாகவும் இருந்தது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் உறுதியாக இப்படியொரு பேரிழப்பை தரக்கூடிய அளவிற்கு அதன் வீரியம் இல்லை.

இருப்பினும் நாம் ஏன் இந்த நிலையை எதிர்கொள்கிறோம். இதற்கு காரணமாக நான் கூறுவது என்னவென்றால் கொடூரமான ஊழல், அரசின் கையாலாகாதத் தன்மை, திறமையின்மை, அடிப்படை அறிவற்ற நிலை, அரசியல்வாதிகளின் அலட்சியம், அதிகாரிகளின்  மற்றும் ஊழியர்களின் பொறுப்பின்மை, கடைசியாக நமது மக்களின் சமூக அறிவின்மை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 19 November 2015

சங்கப் பாடல்களை அறிவோம் – குறுந்தொகை-5

kurundhogai 4பாடலைப் பாடியவர்- நரிவெரூஉத் தலையார்
இக்குறுந்தொகைப் பாடலில், மனிதனின் வளர்ச்சிப் படிநிலைகளில் மன உணர்வுகளும் மாறுபடுகின்ற தன்மையினைப் பதிவு செய்திருக்கின்றார் புலவர்.
காதலின் தன்மை இதுவென அறியாத வளரிளம் பருவத்துப் பெண். காதலன் பிரிவினால் அவளுடைய கண்கள் தூங்க மறுக்கின்றன. இதுதான் காதலின் தன்மையா என்று வியப்படைகின்றாள் அவள். இங்கே அவளின் உள்ளத்து உணர்வுகள் பாடலாகிறது. இதோ பாடல்…
அதுகொல் தோழி காம நோயே
வதிகுருகு உறங்கும் இன்நிழல் புன்னை
உடைதிரைத் திவலை அரும்பும் தீநீர்
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்
பல்லிதழ் உண்கண் பாடு ஒல்லாவே.
“இனிய நிழலைத் தரும் புன்னை மரம். அதில் வந்து தங்கிய குருகு உறங்கிக் கொண்டிருக்கிறது. அந்தப் புன்னை மரத்தின் மீது கடலலைகள் வந்து மோதுகின்றன. மோதும் அலைகளால் வீசப்படும் துளிகளால் புன்னையின் அரும்புகள் மலருகின்றன. இத்தகைய இனிய நீரினையுடைய மென்புலத்துத் தலைவன் என்னைப் பிரிந்தான் என்று பல இதழ்களையுடைய தாமரை போன்ற என் கண்கள் தூக்கம் இல்லாததாயின. இதுதான் காதல் நோயா? ” என்று தோழியிடம் வினா எழுப்புகின்றாள் தலைவி.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

இந்தியாவின் முதல் திருநங்கை காவல் அதிகாரி தமிழகத்தில் நியமனம்!

prithika_yashiniசேலத்தைச் சேர்ந்த பிரித்திகா யாசினி ஓர் திருநங்கை. பி.சி.ஏ பட்டதாரி. தனது இருபதாவது வயதில் பெண்ணாக மாறினார். வீட்டை விட்டும் வெளியேறினார். தன் வாழ்க்கை திசை மாறியதில் தளர்ந்துவிடாமல் போராட ஆரம்பித்திருக்கிறார் பிரித்திகா. விடுதிக் காப்பாளர், தொண்டு நிறுவன ஊழியர், ஹார்மோன் சிகிச்சை ஆலோசகர் என தொடர்ந்த பணிகளுக்கிடையில் தமிழினப் படுகொலைக்கு எதிரான போராட்டம், திருநங்கை திருமணம், வேலை வாய்ப்பு போராட்டங்களையும் முன்னெடுத்து செய்தார்.
தன் தளராத முயற்சியினால் காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பித்தல் முதல் நியமன ஆணை பெற்றது வரை ஒவ்வொரு கட்டமாக போராடி தடைகளைக் கடந்து வெற்றி பெற்றிருக்கிறார். இந்தியாவின் முதல் திருநங்கை காவல் அதிகாரி என்ற வரலாற்றையும் படைத்திருக்கிறார். அவர் கடந்து வந்த கடினமான பாதைகளைக் காணலாம்.
கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக காவல் துறையில் காவல் உதவி ஆய்வாளர் பணிக்கு அறிவிப்பு வெளியானபோது அதற்கு விண்ணப்பித்தார் பிரித்திகா யாஷினி. காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்காக விண்ணப்பித்த முதல் திருநங்கை பிரித்திகா தான். ஆனால் பிரித்திகாவின் விண்ணப்பத்தை சீருடை பணியாளர் தேர்வாணையம் நிராகரித்தது. காரணம் அவரது கல்விச் சான்றிதழ்களில் ஆண் பெயர் இருந்தது. பின்னர் அவர் தனது பெயரை சட்டப்படி சான்றிதழ்களில் மாற்றினார். தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்தார் பிரித்திகா.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 17 November 2015

உடல் பருமனும் நோய்களும்

udal paruman4பழைய காலங்களில் பலிகொடுப்பதற்கென்றே ஆடு மாடு போன்றவைகளை வளர்ப்பார்கள். மிகவும் பரிவுடன் அதற்குத் தேவையான எல்லாத் தீவனங்களையும் கொடுத்து வளர்ப்பார்கள். அதை வேலைக்கும் பயன்படுத்தமாட்டார்கள் அதுவும் நன்கு ‘கொழு கொழு’ என்று வளரும். அந்தக் காலத்தில் மட்டுமல்ல, இந்தக் காலத்திலும் சிலர் இதேபோல் செய்கிறார்கள். ஆனால் விலங்குகளுக்கு பதிலாக அதேபோல பிள்ளைகளை வளர்க்கிறார்கள், பலி கொடுப்பதற்கு.
ஆம், உடல் பருமனால் அநேக நோய்கள் உண்டாகின்றன. ஆயுள்காலத்தை வெகுவாக குறைக்கும் காரணிகளில் உடல் பருமன் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.
சிறுவயதில் குழந்தைகள் எப்படி வளர்க்கப்படுகிறார்களோ அப்படியே வாலிப வயதிலும் வளர்கிறார்கள், நடுத்தர வயதிலும் வாழ்கிறார்கள். கல்லூரிக்குச் சென்றாலும் நூலகத்தை விட உணவகத்திலேயே இவர்களை அடிக்கடி பார்க்க முடியும்.
உடல் பருமன் கிட்டத்தட்ட எல்லா நோய்களோடும் தொடர்புடையது.
udal paruman6இப்படிச் சொன்ன உடனேயே, உங்கள் மனதில் எழுகின்றவைகள். “டாக்டர், என் மகன்/மகள் எவ்வளவு எடை இருக்க வேண்டும்?” இப்போது இருக்கும் எடை சரிதானா, அதிகமா? என்பதுதான். இதற்கெல்லாம் பதில் இருக்கிறது. ஆனால் இவைகளுக்கு பதில் காண்பதற்கு முன்பாக, சில வாழ்வியல் புரிதல்கள் நமக்கு வேண்டும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 16 November 2015

தமிழர் சங்கமம் ! – இலங்கைத் தமிழ்ச்சங்க விழா – 2015

USTPAC_Panel
அமெரிக்காவில் உள்ள நியூசெர்சி மாநிலத்தின் ‘மோன்றோ’ நகரில், 38 வது ஆண்டு இலங்கைத் தமிழ்ச்சங்க விழா, நவம்பர் 7, 2015 ஆம் நாள் நடைபெற்றது. தமிழர் சங்கமம் என்று வழங்கப்படும் இவ்விழா ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் திங்களில் நடைபெறுவது வழக்கம். ஈழத்தமிழர்களும் தமிழ்நாட்டு உணர்வாளர்களும் சங்கமிக்கும் இவ்விழாவானது, மொழி, கலை, இலக்கியம், அரசியல், பண்பாடு என்று அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கியது.
ThamilThaiVaazhthu

காலை எட்டு மணியளவில், தமிழ்த்தாய் வாழ்த்துடன் தமிழர் சங்கம விழா இனிதாகத் துவங்கியது. அமெரிக்கத் தமிழ் அரசியல் செயலவை ஒருங்கிணைத்த ‘அரசியல் சீரமைப்பும் அரசியலமைப்பு மாற்றமும்’ எனும் தலைப்பில் குழுவிவாதம் நடைபெற்றது. அதில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, இலங்கைத் தமிழ்ச்சங்கம், தமிழ் கார்டியன், அமெரிக்கத் தமிழ் அரசியல் செயலவை ஆகியவற்றின் பேராளர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 12 November 2015

பாரதியின் பார்வையில் அறிவியல் தொழில்நுட்பச் சிந்தனைகள்

bharathi1
பாரதி வறுமையில் வாடிய போதிலும் வீட்டை மறந்து நாட்டையே நினைத்து வாழ்ந்தவர். இவரது ஆற்றல் கவிதையில் மட்டுமல்லாது கலை, இலக்கியம், அரசியல், ஆன்மிகம், அறிவியல், பெண்கள் முன்னேற்றம், கைத்தொழில் பற்றிய விழிப்புணர்வு, தொழில்முறை, மருத்துவம் எனப் பல்துறைகளில் புலமை பெற்றவர். இப்பாரதியின் பல்நோக்குப் பார்வைகளில் நாம் பாரதியின் அறிவியல் நோக்கையும் அதன்மீது அவரது பார்வையின் பிரசுரங்களையும் கண்டுணரலாம்.
பாரதியின் குழந்தைப் பற்று
குழந்தைகளை ‘ராஜா’ வென்றே கூப்பிடுவார். நான் செய்வதைப் போல் செய்யாதீர்கள். சொல்வதையே செய்யுங்கள் என்பார் பாரதி. அதாவது தாம் செய்வதில் ஏதாவது கெடுதலிருக்கும். சொல்வதில் இராது என்பதே அர்த்தம். குழந்தைகளை பயமுறுத்தக்கூடாது, குழந்தைகளுக்குப் பருவத்திலேயே பயமுறுத்தி விட்டால் பிறகு அடிமை உணர்வு ஆழமாகப் பதிந்துவிடும் என்பார்.

பூனை என்று யாராவது குழந்தைகளைப் பயமுறுத்தினால் அவர்களைக் கோபிப்பார். குழந்தைகளைக் கூப்பிட்டுப் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு ‘பூனையும் இல்லை, பயமும் இல்லை’ என்று சொல்லித் தருவார். பாரதி ராத்திரி வேளையில் குழந்தைகள் மலஜலம் கழிக்க வேண்டும் என்றால் துணையில்லாமல் தனியாகப் போகும்படிச் சொல்வார். தாம் கூடவே இருப்பதாக நினைத்துத் தைரியத்தை வளர்க்க வேண்டும் என்றும், இருளைக் கண்டு பயப்படக்கூடாது என்றும் சொல்லித் தருவார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

வேர்க்கடலை கொழுப்பு அல்ல.. ஒரு மூலிகை

Peanuts
வேர்க்கடலை மனித வளர்ச்சிக்கு உதவும் ஒரு சத்தான தாவரம் என்பது எல்லோரும் அறிந்ததே. ஆனால் சாதாரணமாக நாம் வேர்க்கடலைக்கு, இல்லை கடலை என்ற வார்த்தையை வேறு ஒன்றுக்கு பயன்படுத்தும் காலத்தில் இருக்கிறோம். இரு ஆண்கள் பேசிக்கொண்டால் பேசுகிறார்கள் என்போம், ஆனால் ஒரு ஆணும் பெண்ணும் பேசிக் கொண்டிருந்தால் கடலை போடுகிறார்கள் என்கிறோம். மகாத்மா காந்தி ஆட்டுப்பாலும், கடலையும் உண்டே அதிக நாள் வாழ்ந்தார் என்ற வரலாறும் படித்திருக்கிறோம். இந்த வேர்க்கடலையில் அப்படி என்னதான் உள்ளது என இனி காண்போம்.
தமிழகத்தில் நிலக்கடலை கோடை பருவத்தில் சூன், சூலை மாதங்களிலும், கார்த்திகை பட்டத்திலும், நவம்பர், டிசம்பர் மாதங்களிலும் பயிரிடப்படுகிறது. நல்ல வளமான செம்மண் பாங்கான காற்றோட்டமும், வடிகால் வசதி உடைய நிலமுள்ள இடத்தில் தான் கடலை நன்கு வளரும். தமிழகத்தில் தென் மாவட்டங்களில் களிமண் பகுதிகளிலும் நிலக்கடலை பயிரிடப்படுகிறது. கடலை விதையை விதைத்தவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். பின்பு 5 நாட்கள் கழித்து உயிர் நீர் பாய்ச்ச வேண்டும். நிலக்கடலைத் தாவரத்தில் பக்கக்கிளைகள் தோன்றும் போது 2 முறை நீர் பாய்ச்ச வேண்டும்.
verkadalai5
இக்கடலையை இலைச் சுருட்டுப்புழு தாக்கும். இதன் தாக்குதலில் இருந்து பயிரைக் காக்க வேப்பங்கொட்டைச் சாற்றினை 5 சதவிகிதம் தயாரித்து தெளித்தால் இலைச்சுருட்டுப் புழு மடிவதோடு, பயிறுக்கு எந்த பக்கவிளைவும் ஏற்படாது. இதற்காக தமிழக அரசு ஜிப்சம் உரங்களை மானிய விலையில் கொடுத்து வருவது கூடுதல் தகவலாகும்.

நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள், அவ நம்பிக்கைகள் இந்தியா முழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பி விடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.