கோட்டைச்
சுவரை காத்து நின்ற மறவர் படை வீரர்கள் தங்கள் உயிரை நினைத்து அஞ்சாமல்
போர் புரிந்தனர். வெள்ளையனின் பீரங்கி குண்டுகள் கோட்டைச் சுவரை துளைக்கும்
போது ஏற்படும் ஓட்டையை, உடனுக்கு உடன் செப்பணிட்டு சுவரை சரி செய்தனர்.
சிலர் அச்சமயம் உடல் சிதறி இறந்தனர். சிலர் சுவரின் ஓட்டையை அடைக்க தங்கள்
உடலைக் கொண்டு நின்றனர், அவர் இறந்ததும் மற்றொருவர் நிற்பார் இதுபோன்று
கோட்டையைக் காத்து நின்றனர். இவர்களின் வீரத்தினைக் கண்டு வெள்ளையர்கள்
நிலைகுலைந்தனர். பின்னர் புலித்தேவரை வெற்றிகொள்ள வேண்டுமெனில், அவரிடம்
நட்புடன் இருக்கும் மற்ற பாளையங்களை வெற்றி பெற்று, பின்னர் இறுதியில்
புலித்தேவரைத் தாக்க வெள்ளையர்கள் திட்டம் தீட்டினர்.
அதன்படி 1766ல் கொள்ளங்கொண்டான்
பாளையத்தினைத் தாக்கி நீண்ட போருக்குப் பின் கோட்டையைக் கைப்பற்றினார்கள்.
பின் சேத்தூர் பாளையத்தினைத் தாக்கினார்கள், இந்தப் போரிலும் வெள்ளையர்கள்
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கோட்டையைக் கைப்பற்றினார்கள். பின் 1767ம்
ஆண்டில் நடைபெற்ற போர் புலித்தேவரின் இறுதிப்போர் எனக்கூறலாம். இந்த
இறுதிப்போரில் வெள்ளையர்களின் படைக்குத் தளபதியாக இருந்தவன் டொனல்டு
காம்பெல். இவன் பெரும் படையுடன் வந்து புலித்தேவர் கோட்டையைத் தாக்கினான்.
இந்த இறுதிப் போர் மிக நீண்ட நாட்கள் நடைபெற்றது. வெள்ளையர்கள் சக்தி
வாய்ந்த பீரங்கிக் குண்டுகளை வீசியும், கோட்டைச் சுவரை ஒன்றும்
செய்யமுடியாமல் திணறினர்.
மறவர்கள்,
கோட்டைச் சுவரின் கொத்தளங்களில் இருந்து கொண்டு கோட்டையைக் காத்து
நின்றார்கள். இந்தப் போரில் புலித்தேவரின் படைவீரர்கள் கோட்டைச் சுவரில்
காத்து நின்றதை டொனல்டு காம்பெல் பிரிட்டனுக்கு எழுதிய கடிதத்தில்
குறிப்பிட்டிருந்தது பின்வருமாறு. “இந்தக் கோட்டைச் சுவர் வெறும்
களிமண்ணாலும், வைக்கோலாலும் சேர்த்து கட்டப்பட்ட சுவர். ஆனால் இந்த சுவரில்
நமது சக்தி வாய்ந்த பீரங்கி குண்டுகளினால் கூட சிறு விரிசலோ, அதிர்வுகளோ
உண்டு பண்ண முடியவில்லை. மிக வலிமை வாய்ந்ததாக இந்தக் கோட்டைச் சுவர்
உள்ளது. நாம் பல நவீன ஆயுதங்கள் கொண்டு போர் செய்கிறோம். இந்த தமிழ்
மறவர்கள் ஈட்டியை மட்டும் வைத்துக்கொண்டு போர் செய்கின்றார்கள். அதுவும்
சுமார் 18 அடி நீளம் உள்ள இந்த ஈட்டியை இவர்கள் உபயோகிக்கும் லாவகம். இதைக்
கண்டு நாம் வியக்காமல் இருக்க முடியாது. இவர்களது வீரம் உலகில் உள்ள எந்த
போர்வீரர்களிடம் இருக்காது.
இவர்கள் கோட்டைச் சுவரில் சிறு வழி
மட்டும் தான் உள்ளது. அந்த வழியாக கதவை உடைத்துத்தான் உள்ளே செல்ல
வேண்டும். அவ்வாறு நாம் உள்ளே சென்றால் நமக்கு பல உயிர்பலி ஏற்படும்.
இந்தத் தமிழ் மறவர்கள் உயிரைப் பற்றி சிறிதும் அச்சம் அடையவில்லை. இவர்கள்
கோட்டைச் சுவரில் துளை உண்டானது, உடனே அந்தத் துளை சரிசெய்யப்படுகிறது.
வேறு இடத்தில் அது போன்ற துளையில் சிலர் தங்கள் உடலைக் கொண்டு அடைத்து
நிற்கின்றனர். குண்டு வந்து வீழ்ந்ததும் உடல் சிதறுகிறது, பின்னர்
மற்றொருவர் வந்து நிற்கிறார். இறந்த உடல்களை அவர்கள் அப்புறப்படுத்தவும்
இல்லை. மனித உடல் இரத்தமும் சதையும் சிதறுவதைக் கண்டு அச்சம் கொள்ளவும்
இல்லை. ஒருவர் பின் ஒருவராக இறந்தாலும் கவலை சிறிதும் இல்லை, இறந்த உடல்கள்
மீது குண்டு வீழ்ந்து அந்த உடல் சிதறினாலும் அவர்கள் கவலை அடையவில்லை. இது
போன்று கோட்டைச் சுவரை, உலகில் வேறு எந்த படையினரும் காத்து நின்றிருக்க
மாட்டார்கள்”.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment