தமிழ்நாட்டில்
பாரம்பரிய மழைநீர் சேகரிப்பு என்னவென்றால் ஏரிகள்தான். இது தமிழ்நாட்டில்
மட்டுமல்ல, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா போன்ற மூன்று மாநிலங்களிலும் இந்த
மாதிரியான ஏரிகள் இருந்திருக்கிறது. தமிழில் ஏரி என்று சொல்கிறோம்,
தெலுங்கில் செருவு என்று சொல்வார்கள். கர்நாடகாவில் கேரே என்று
சொல்வார்கள். எல்லாமே ஒன்றுதான், பெயர்தான் வித்தியாசம். இது
விவசாயத்திற்காக மழைநீரை சேமிக்கிற ஒரு கட்டமைப்பு. இந்த தண்ணீரை
குடிக்கமாட்டார்கள், இதை விவசாயத்திற்காக மட்டும்தான் பயன்படுத்துவார்கள்.
மழைக்காலத்தில் அந்த ஏரியில் தண்ணீரை
சேமித்துவிடுவார்கள். மதகு என்று ஒன்று இருக்கும், அந்த மதகை காலையில்
திறப்பார்கள், திறந்துவிட்டார்கள் என்றால் வயலுக்கு வாய்க்கால் வழியாக
தண்ணீர் சென்றுவிடும், மாலைவேளையில் மூடிவிடுவார்கள். அதேமாதிரி கலங்கள்
என்று ஒன்று இருக்கும், கலங்கள் என்னவென்றால் ஏரி நிரம்பிவிட்டது என்றால்
உபரிநீர் அந்த கலங்கள் வழியாகச்சென்று பக்கத்து கிராமத்தினுடைய ஏரியை
நிரப்பும். ஏரிகளை சங்கிலி மாதிரி இணைத்திருந்தார்கள். மிகச்சிறப்பான
கட்டமைப்பு அது. எனவே வீணாவது குறைவாகத்தான் இருக்கும். ஒன்றில்
சேமிக்கவில்லை என்றால் அடுத்ததில் சேமிக்கப்படும். அடுத்தது, அடுத்தது
என்று சென்றுகொண்டே இருக்கும்.
இந்த
ஏரியில் இரண்டு விதமான ஏரிகள் சொல்கிறார்கள். ஒன்று நதியில் ஓடுகிற நீரை
திருப்பி ஏரிகளில் சேமிப்பார்கள். அதற்கு உதாரணம் வீராணம். காவிரியில்
ஓடுகிற தண்ணீரை திருப்பிவிட்டு வீராணம் ஏரியில் சேமிப்பார்கள். நதிகளே
இல்லாத இடத்திலேயும் ஏரிகள் இருந்திருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தை
எடுத்துக்கொண்டால் பாலாறைத் தவிர அதிகமாக ஆறுகள் கிடையாது. அந்த மாதிரி
இடங்களிலேயும் பெய்கிற மழைநீரை ஏரிகளில் சேமித்து வைத்திருக்கிறார்கள்.
இதற்கு உதாரணம் செம்பரம்பாக்கம் ஏரி. தமிழ்நாட்டில் மொத்தம் 39000 ஏரிகள்
இருக்கிறது. அதில் பெரிய ஏரி செம்பரம்பாக்கம்தான். அடுத்தது மதுராந்தகம்,
உத்திரமேரூரில் ஒரு பெரிய ஏரி இருக்கிறது, இப்படி பல ஏரிகள் இருக்கிறது.
இவையனைத்துமே விவசாயத்திற்குத்தான் பயன்படுத்திக் கொண்டார்கள்.
குடிநீருக்கு ஊரணிகள் என்று இருந்தது
அல்லது குளங்கள் என்று இருந்தது. ஊரணி இன்றும் இராமநாதபுரத்தில்
இருக்கிறது. பேராவூரணி என்ற ஊரே இருக்கிறது, அந்த ஊரணியை வைத்துத்தான்
அதற்கு அந்த பெயரே. அதில் படித்துறை இருக்கும், எனவே படியில் இறங்கிச்
சென்று குடத்தில் தண்ணீரை எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்று
உபயோகப்படுத்துவார்கள். எனவே குடிப்பதற்கு ஊரணி, விவசாயத்திற்கு ஏரிகள்.
கிராமப்புறங்களில் மழைநீர் சேமிப்பை இவ்வாறு சிறப்பாக செய்திருந்தார்கள்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment