Thursday 22 October 2015

சமணர்கள்

samanargal2
ஏறத்தாழ கி.மு. 500-400 காலப்பகுதியில்தான் வடநாட்டுக் கருத்துகள் தமிழ் இலக்கியத்தில் புகுந்திருக்க இயலும். பொதுவாகச் சங்க இலக்கியத்தின் காலம் கி. மு. 3ஆம் நூற்றாண்டு முதலாக கி.பி. முதல் நூற்றாண்டு வரை கணிக்கப்படுகிறது. சங்க இலக்கியம் இருவேறு இழைகளால் பின்னப்பட்டிருக்கிறது. குறுநில மன்னர்கள், பழங்குடி இனத்தவர்கள், நாட்டுப்புறங்களிலும் காட்டுப்புறங்களிலும் வாழ்ந்த மக்கள் போன்றவர்களைப் பற்றிய சித்திரங்கள் ஒருபுறம். மூவேந்தர்கள், நகர்ப்புற வாழ்க்கை, மருதநில வாழ்க்கை, கிழார்கள் போன்றவர்களைப் பற்றிய சித்திரங்கள் மறுபுறம். சுருங்கச் சொன்னால், மூவேந்தர்களுக்கு முந்திய வாழ்க்கை, மூவேந்தர்களுக்குப் பிந்திய வாழ்க்கை என்ற இரு பகுதிகளைச் சங்க இலக்கியத்தில் (அகநூல்கள் உட்பட) தெளிவாகக் காண இயலும்.
மூவேந்தர்களுக்குப் பிந்திய வாழ்க்கையைச் சித்திரிக்கும் இலக்கியப் பகுதிகளில் வடமொழிக் கருத்துகள் (யாகம் போன்றவை பற்றிய செய்திகள்) விரவியுள்ளன. வடமொழிச் சொற்களும் கலந்திருக்கின்றன. வடமொழிக் கருத்துகளின் தாக்கம் தமிழகத்தில் ஏற்பட்ட சமயத்தில் அல்லது அதற்குப் பிறகு சங்க இலக்கியத்தின் இந்தப் பகுதிகள் எழுந்திருக்கலாம் என்பதை இது காட்டுகிறது. வடநாட்டிலிருந்து பிராமணர்களும் பிறரும் தென்னாடு நோக்கிவந்து தமிழ்ப்பண்பாட்டுடன் கலந்து விட்ட காலம் ஏறத்தாழ கி.மு. நான்காம்-மூன்றாம் நூற்றாண்டு அளவில் இருக்கலாம். குறிப்பாக, ஜைன, பௌத்த மதங்களின் சிந்தனைகளும் சங்க இலக்கியங்களில் காணப்படுவதால், ஏறத்தாழ மகாவீரர், புத்தர் போன்றோரின் காலத்தை ஒட்டியே இத்தகைய கலாச்சாரப் படையெடுப்பு நிகழ்ந்திருக்க இயலும். ஒரு மதம் தோன்றியவுடன் அதைப் பரப்பவேண்டும் என்ற வேகம் காணப்படுவது இயற்கை ஆதலின், இப்புதிய மதங்களின் கருத்துகளைப் பரப்பவேண்டும் என்ற ஆவல் மிக்கவர்களும், தென்னாடு நோக்கி அதுவரை வராத வேதப்பண்பாட்டைச் சேர்ந்தவர்களும் கொஞ்சம் கொஞ்சமாக கி.மு. மூன்றாம் நூற்றாண்டு அளவில் தமிழகத்துக்கு வந்துசேர்ந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. சங்க இலக்கியத்தில் சமணக் கவிஞர்களும் பௌத்தக் கவிஞர்களும் உள்ளனர். தமிழின் ஆதிநுலான தொல்காப்பியமும் தமிழின் தலைசிறந்த இலக்கியமான திருக்குறளும் ஜைனர்களால் (சமணர்களால்) இயற்றப்பட்டவை என்று சொல்லப்படுகின்றன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment