ஏறத்தாழ
கிறித்துவ சகாப்தம் தோன்றிய காலத்தை ஒட்டி இந்தியாவில் (அக்காலத்தில்
இன்றுபோன்ற ஒரு ‘இந்தியா’ இல்லை, இருந்தாலும் கருத்து எளிமை கருதி இந்தச்
சொல் பயன்படுத்தப்படுகிறது. நாவலந்தீவு என்றோ பரத கண்டம் என்றோ வேறு பல
பெயர்கள் உள்ளன, பிடிக்காதவர்கள் அவற்றில் ஒரு சொல்லைப்
பயன்படுத்திக்கொள்ளலாம்). வாழ்க்கையின் இலட்சியங்கள் (இவற்றிற்குப்
புருஷார்த்தங்கள் என்று பெயர்) மூன்று என்ற சிந்தனை உருவாகியது.
‘தர்மார்த்தகாமம்’ என்று வடமொழியில் இதைக் குறித்தார்கள். தமிழில் அறம்
பொருள் இன்பம் என்றார்கள். திருக்குறள் இந்த அமைப்பில்தான் முப்பாலாக
அமைந்துள்ளது. வீடு அல்லது மோட்சம் என்ற கருத்து பின்னர் இவற்றுடன்
இணைக்கப்பட்டது. இதை ஒட்டித் தமிழிலும் அறம்பொருள்இன்பம்வீடு என்ற தொடர்
உருவாகியது. தண்டியலங்காரம், “அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூற்பயனே”
என்று சொல்லுகிறது.
தர்மம்
என்ற சொல்லின் பொருளும் அறம் என்பதன் பொருளும் சமமல்ல என்றாலும் ஏறத்தாழச்
சமம் என்று வைத்துக் கொள்ளலாம். தர்மம் என்ற சொல்லின் மூலம் த்ரு- என்பது.
இதற்கு இறுகப்பிடித்துக்கொள், பத்திரமாய்க் காப்பாற்று என்று பொருள்.
தர்மம் பிரபஞ்சத்தைப் பிடித்திணைக்கிறது. அன்பைவிட தர்மம் தான் உலகைச்
சுற்றும்படி செய்கிறது. பொருள்கள் எப்படி இருக்கின்றன எப்படி இருக்க
வேண்டும் என்ற இரண்டும் தர்மத்திற்குள் அடங்கியிருக்கின்றன.
அர்த்தம் என்பது பொருள்: பணம், அரசியல் அதிகாரம், வெற்றி, வார்த்தையின் பொருள், ஒன்றின் நோக்கம் என்பன இதற்குள்ள பல அர்த்தங்கள்.
காமம் என்பது இன்பமும் ஆசையும். வெறும்
காம இன்பம் மட்டுமல்ல, புலன் சார்ந்த இன்பம்-இசை, நல்ல உணவு, வாசனை,
ஓவியம்-யாவும் காமம் என்பதற்குள் அடங்குகின்றன.
முழு வாழ்க்கை வாழ்வதற்கு ஒவ்வொரு
மனிதனுக்கும் இவற்றில் பாத்தியதையும் கடமையும் உண்டு. பழங்கால சமஸ்கிருதப்
பனுவல்கள் இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றை மையப்படுத்தியே அமைந்தன. அவற்றில்
புகழ்பெற்றவை, மனுவின் தர்மசாத்திரம், கௌடில்யரின் அர்த்தசாத்திரம்,
வாத்ஸ்யாயனரின் காமசூத்திரம் ஆகிய மூன்றுமாகும்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment