சில
இனவெறிச்செயல்கள் அதிகத் தீங்கான விளைவுகளை ஏற்படுத்தாததாகவும்,
மறைமுகமானதாகவும் இருப்பதுண்டு. அதைச் செய்பவருக்கும் தன்னால் ஒருவர்
பாதிக்கப்படுகிறார் என்பது தெரியாது; பாதிக்கப்படுபவருக்கும் தன் மனதை அது
வருத்தும் காரணம் தெளிவாகப் புரியாத அளவுக்கு நுட்பமான செயலாக அது
அமைந்திருக்கும். அதில் குறிப்பிடத்தக்க ஒன்று ஆசிய அமெரிக்க குடிமக்கள்
தொடர்ந்து எதிர்கொண்டு வருவது. அது சீனா, கொரியா, வியட்நாம் ஆகிய நாடுகளைப்
பூர்வீகமாகக் கொண்ட கிழக்காசிய வழித்தோன்றல்களாக இருந்தாலும் சரி அல்லது
இந்தியா, பங்களாதேஷ், ஸ்ரீலங்கா போன்ற தெற்காசிய நாடுகளின்
வழித்தோன்றல்களாக இருந்தாலும் சரி; புலம் பெயர்ந்த தங்களது முன்னோர்கள்
எதிர்கொண்ட “நீ எங்கிருந்து வருகிறாய்?” என்ற அதே கேள்வியையே அமெரிக்க
நாட்டில் பிறந்து அமெரிக்க குடிமக்களாகவே தங்களைக் கருதி வாழ்ந்து வரும்
பிற்காலத் தலைமுறையினரும் எதிர்கொண்டு வருகிறார்கள்.
அவர்கள் அயல்நாட்டில் இருந்து வந்து
குடியேறிய பெற்றோர்களுக்கு அமெரிக்க மண்ணில் பிறந்த “முதல் தலைமுறை
அமெரிக்கர்கள்” (The first generation Americans) ஆக இருந்தாலும், முதல்
தலைமுறை அமெரிக்கர்களுக்குப் பிறந்த தொடர்ந்து வரும் இரண்டாம், மூன்றாம்
தலைமுறை அமெரிக்கர்களாக இருந்தாலும் சரி, விதிவிலக்கின்றி அவர்கள் ‘நீ
எங்கிருந்து வருகிறாய்’ என்றக் கேள்வியை எதிர் கொள்வார்கள். அதற்குக்
காரணம் வெளிப்படையாகத் தெரியும் அவர்களது ஆசிய இனத்தைக் குறிக்கும்
தோற்றம்.
இதனைப்
புலம் பெயர்ந்து கனடாவில் வாழும் இலங்கைத் தமிழர் திரு. வ.ந. கிரிதரன்
அவர்கள் ‘நீ எங்கிருந்து வருகிறாய்? என்ற தனது கதையிலும்
குறிப்பிட்டுள்ளார். பொதுவாகப் புலம் பெயர்ந்து வருபவர்கள் இக்கேள்வியை
முதலில் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. ஏனெனில் அதுதான் உண்மையும் என்பதால்
அவர்களுக்கு அக்கேள்வி முதலில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
காலப்போக்கில் தன்னை அந்நாட்டின் குடியுரிமை பெற்றவராக ஆக்கிக் கொண்டு,
அவ்வாறே வாழத் துவங்கியதும், அக்கேள்வியின் அடிப்படை இனபேதம் கொண்டதாக
இருக்குமோ என்று சந்தேகிக்கும் நேரங்களும் உண்டு. ‘உன்நாட்டிற்குத்
திரும்பிப் போ’ அல்லது ‘நீ எங்களில் ஒருவர் அல்ல’ போன்ற மறைமுகப் பொருள்
பொதிந்திருப்பதாகக் கூட கருதும் நிலையும் சில மோசமான சூழ்நிலைகளில் ஏற்படக்
கூடும். தனது பணி வாய்ப்பு, அதில் முன்னேற்றம் போன்றவற்றில் தாங்கள்
தட்டிக்கழிக்கப்பட நேர்ந்தால் தங்களது புலம் பெயர்ந்த பின்னணி அதற்குக்
காரணமாக இருப்பதாகவும் ஐயுறுவதுண்டு.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment