கபீர்தாசர்
கி.பி. 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கவிஞர், இவர் ‘சந்த் கபீர்’ எனவும்
அழைக்கப்படுவார். பொதுவாக, கபீர்தாசர் ஓர் இசுலாமிய நெசவாளர்
குடும்பத்தில் வளர்ந்தவரென்றும், பக்தி இயக்கக் காலத்தில் இராமனந்தர் என்ற
குருவினால் ஈர்க்கப்பட்டு இராமரையும் வழிபட்டார், இந்து-முஸ்லீம் ஒற்றுமை
இவரது அறிவுரைகளால் மேம்பட்டது என்பதும் வரலாறு. ஆனால் இவரது பிறப்பு
மீதும், வாழ்க்கையின் மீதும் எண்ணற்ற தொன்மங்களும் புனையப்பட்டுள்ளன.
இந்தியவியல் ஆய்வாளர், வெண்டி டோனிகர் (Indologist, Wendy Doniger), இந்த
முயற்சிகள் கபீர்தாசரை ஒரு இந்துவாக உலகின் முன்னிறுத்த உருவாக்கப்பட்ட
கட்டுக்கதைகள் அவை என்றும் கூறுவார். எவ்வித ஆதாரமுமற்ற அப்புனைவுகளில்,
கபீர்தாசர் ஒரு பிராமணத் தாயாரால் கைவிடப்பட்ட குழந்தை என்றும், இசுலாமிய
நெசவாளி ஒருவர் அவரை வளர்த்ததாகவும், இசுலாமியராக வளர்க்கப்பட்ட கபீர்தாசர்
பிற்காலத்தில் இராமபக்தராக மாறினார் என்றும், அவரது குடும்பம், மனைவி,
மக்கள் பற்றியும் புழங்கிவரும் கதைகள் பற்பல.
கபீர்தாசர் இந்து, இசுலாமியம் ஆகிய
இருமதங்களின் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் வெறுத்து அவற்றின் மீது
கேள்விகளை எழுப்பியவர். கபீர்தாசர் ராம்-ரஹீம் என்ற அடிப்படையில்
ஒருவரையும் வேறுபடுத்திப் பார்த்தவர் அல்லர். இவரது சிந்தனைகளின்
வெளிப்பாடுகள் இறைவனைப் பற்றிய கருத்துகள், இறைவழிபாட்டைப் பற்றிய
கருத்துகள் என யாவும் இந்து-முஸ்லீம் மதக் கோட்பாடுகளை ஒருங்கிணைத்தே
வெளிப்பட்டன. அவை இந்துமுஸ்லிம் நல்லுறவை வளர்க்கும் இயக்கமாகவும்
விளங்கியது. இவரது பாடல்களில் சில சீக்கிய மதத்தின் ஆதிகிரந்தத்தில் இடம்
பெற்றுள்ளன. நெசவாளராக வாழ்ந்து, சமயநல்லுறவிற்கு பெரும்பங்காற்றிய சிறந்த
கவிஞரான கபீர்தாசரின் பெயரில் அவரது நினைவைப் போற்றும் வண்ணம் ‘சந்த்
கபீர்’ என்ற சிறந்த நெசவாளருக்கான விருதை மத்திய அரசு கடந்த ஐம்பது
ஆண்டுகளாக (1965இல் இருந்து) வழங்கி வருகிறது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment