காவிரி
பாயும் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள தேரெழுந்தூர் என்ற ஊர் கம்பர் பிறந்த
ஊராகும். மயிலாடுதுறையில் ஓடும் காவிரி தூலா தீர்த்தம் என்று இக்காலத்தில்
மக்களால் அழைக்கப்படுகின்றது. இதில் ஐப்பசி மாதத்தில் முழுகுவதன் வாயிலாக
பாவங்கள் தீரும் என்றும் இந்த ஆறு கங்கை நதிக்கு ஒப்பானது என்றும் மக்கள்
கருதிவருகின்றனர். கம்பர் காலத்திலும் காவிரி ஆறு கங்கைக்கு ஒப்பானது என்ற
கருத்து இருந்துள்ளது. அவர் தம் காப்பியத்தில் கங்கையை நினைவு
கூரும்போதெல்லாம் காவிரியையும் நினைவு கூருகின்றார். மேலும்
காண்டங்கள்தோறும் காவிரியாற்றை நினைவு கூர்ந்து தன் சோழநாட்டுப் பற்றினைக்
கம்பர் வெளிப்படுத்தியுள்ளார்.
சுந்தர காண்டத்தில் மட்டும்தான்
வெளிப்படையாக காவிரி ஆறு பற்றிய குறிப்பு இல்லை. ஆனால் அனுமன் பொழிலை
இறுத்தபோது ஆற்றில் ஆச்சாள் மரங்கள் வீசப்பட்டன என்று கம்பர்
குறிப்பிடுகிறார். அந்த ஆறு காவிரியாகக் கொள்ளத்தக்கது என்று
உரையாசிரியர்கள் கருதுகின்றனர். ‘‘வண்டு அலம்பு நல் ஆற்றின் மராமரம்,
வண்டல் அம்புனல் ஆற்றில் பாய்ந்தன’’ (சுந்தர காண்டம், பொழில் இறுத்த படலம்,
பா.எ. 32) என்ற பாடலடியில் காவிரியாறு சுட்டப்படுவதாக உரையாசிரியர்கள்
கருதுகின்றனர்.
காவிரியும் கங்கையும் ஒன்று எனக்
கருதுவதன் வாயிலாக அதன் புண்ணியத் தன்மை ஒற்றுமைப்படுகிறது என்பதை விட இரு
ஆறுகளும் இயற்கையோடு செயற்கைக் கலப்பின்றி மாசின்றி இருந்துள்ளன என்பதும்
அறியத்தக்கதாகும். கங்கைக் கரைக் கதை வால்மீகி இராமாயணம் என்றால் காவிரிக்
கரைக் கதை கம்பராமாயணம் ஆகின்றது. கங்கையும் காவிரியும் இரு இணைகள்.
வால்மீகியும் கம்பரும் இரு இணைகள். இந்த இரு இரு இணைகளும் நடையில் நின்று
உயர் இராமன் என்ற ஒற்றை மையத்தை நோக்கிப் பயணிக்கின்றன என்பது
குறிக்கத்தக்கது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment