பாட்டும் தொகையும் என அறியப்படும் சங்க
இலக்கியங்களின் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று கலித்தொகை. பாவகையினால் பெயர்
பெற்ற கலித்தொகை ‘கற்றறிந்தார் ஏத்தும் கலி’ என்றும், ‘கல்வி வலார் கண்ட
கலி’ என்றும் சிறப்பித்துக் கூறப்படுவது. சங்க இலக்கியங்களில்
தொகுக்கப்பட்ட நூல்களில் அனைத்து நூற்றைம்பது பாடல்களும் சிதைவின்றி
கிடைப்பதும் இதன் தனிச்சிறப்பு. நச்சினார்க்கினியர் எழுதிய உரையும்
கலித்தொகைக்குக் கிடைத்துள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சி. வை. தாமோதரம்
பிள்ளை அவர்கள் கி. பி. 1887 ஆம் ஆண்டில் கலித்தொகையை முதன்முதலில் ஏட்டுச்
சுவடிகளை ஆய்ந்து நூலாகப் பதிப்பித்தார்.
கடவுள் வாழ்த்து (சிவனை வாழ்த்தும் 1 பாடல்),
பாலைக்கலி (பெருங்கடுங்கோன் எழுதிய 35 பாடல்கள்),
குறிஞ்சிக்கலி (கபிலன் எழுதிய 29 பாடல்கள்),
மருதக்கலி (மருதன் இளநாகன் எழுதிய 35 பாடல்கள்),
முல்லைக்கலி (அருஞ்சோழன் நல்லுருத்திரன் எழுதிய 17 பாடல்கள்),
நெய்தற்கலி (நல்லந்துவன் எழுதிய 33 பாடல்கள்),
ஆகிய பாடல்கள் கலித்தொகையில் இடம்
பெற்றுள்ளன. பழந்தமிழ்ப் பாடலொன்று ஒவ்வொரு கலிப்பாடல்கள் தொகுப்பும் யார்
யாரால் பாடப்பெற்றது என்று குறிப்பிடுகின்றது. இருப்பினும், பாடல்களின்
அமைப்பையும் நடையையும் கொண்டு நெய்தல் பாடிய நல்லந்துவனாரே கடவுள் வாழ்த்து
முதற்கொண்டு அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் என்பதும் பேராசிரியர் எஸ்.
வையாபுரிப்பிள்ளை போன்ற இலக்கிய ஆய்வாளர் சிலரின் கருத்தாகவும்
இருக்கிறது[1]. மற்ற புலவர்களின் பெயர்களை அறியத் தரும் பழம்பாடலுக்கும்
ஓர் உண்மை அடிப்படையாக இருக்கக்கூடும் என்பதால் பிற புலவர்களையும் அந்தந்த
கலிப்பாடல்களின் ஆசிரியராகவே வழங்குவது தமிழறிஞர் மரபு. இப்புலவர்களுள்
இருவர் அரசர்கள் என்பது கலித்தொகையின் சிறப்பு. ஐந்திணைகளின் அடிப்படையில்
தொகுக்கப்பட்ட கலித்தொகை பாலைத்திணைக்கு முதலிடம் கொடுத்துத் துவங்குகிறது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment