காற்றைக்கிழித்துக்
கொண்டு கடல் நீரோட்டத்துடன் மென்மையாக அவர் படகு
மிதந்துகொண்டிருந்தபொழுது, திடீரென வானில் கடலோரத்தில் வாழும் பறவைகள்
கூட்டம் தென்பட்டது. ஆல்வரெங்கா உற்றுப்பார்த்தார். அவரது கழுத்துத் தசைகள்
இறுகின. வெப்பமண்டலத் தீவு ஒன்று மூடுபனியில் இருந்து வெளிப்பட்டது.
பசிபிக் கடலின் பவளப்பாறைத் திட்டுகள், சிறிய மலையைச் சூழ்ந்த பசுமையான
நிலம், அதைச் சுற்றி நீலநிற நீர் சூழ்ந்து பலவண்ணக் காட்சியாகத் தோன்றியது.
பிரமை இவ்வளவு நேரம் நீடிக்காதே, எனது
வேண்டுதல்களுக்குப் பதில் கிடைத்துவிட்டதா? என்று எண்ணிய ஆல்வரெங்காவின்
மனதில் வேகமாகப் பல மோசமான கற்பனைகளும் விரிந்தன. அவர் கரையில் இருந்து
விலகிச் சென்றுவிடக்கூடும், கடலை நோக்கிப் பின்னோக்கி போய்விடவும் கூடும்…
முன்னர் அவ்வாறுதானே நடந்தது, கரை ஒதுங்கும் நேரத்தில் மீண்டும் கடலுக்குள்
இழுத்துச் செல்லப்பட்டார். அந்தத் தீவையே கூர்ந்து கவனித்து கடற்கரை ஓரம்
தோன்றுவதை வைத்து மேலும் அதைப்பற்றிய விவரங்கள் அறிய முயன்றார். அது ஒரு
குட்டித்தீவு. அவர் கணிப்பின்படி ஒரு கால்பந்தாட்ட மைதானத்தைவிடப்
பெரிதானது அல்ல. அது இயற்கையுடன் ஒன்றி சாலைகளோ, ஊர்திகளோ, வீடுகளோ
இல்லாமல் இருந்தது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment