சென்னையில்
மழை நீர் வடிந்து விட்டது. சென்று கடலில் கலந்து விட்டது. பல உயிர்ப்
பலிகளுடனும் பெரும் பொருட் சேதங்களுடனும், பல மனிதர்களின் வாழ்க்கையின்
மேல் இருந்த நம்பிக்கைகளுடனும். இத்தகைய சேதங்களுக்குப் பின்னும் சென்னை
மீண்டு வந்து கொண்டிருக்கிறது. வந்தாக வேண்டும். அதுதான் நியதி. அது
மனிதர்களின் கீழ்மைகளையும் மேன்மைகளையும் அடையாளம் காட்டிச்
சென்றிருக்கிறது. உலகம் முழுவதும் பேரழிவுகள் ஏற்படும்போது அடையாளங்
காட்டுவதைப் போல. அங்கு நாம் கண்ட மேன்மைகளும் கீழ்மைகளும் எத்தனை நாள்
நம்முடன் இருக்கப்போகிறது என்பதே நாம் அடைந்திருக்கும் நாகரீகத்தின்
அளவுகோல். பேரழிவுகள் வரும் இடங்களில் எல்லாம் மனிதர்களின் உன்னதமும்
இழிவுகளும் சேர்ந்து வெளிப்படுவது இயல்பானதுதான். அதுதான் மனிதகுலத்தைத்
தொடர்ந்து இருக்க வைக்கிறது. ஆனால் அவற்றின் மூலம் மனிதர்கள் அடைவதுதான்,
அந்தந்த நாகரீகங்கள் தொட்டிருக்கும் அல்லது தொடப்போகும் உச்சங்களை அடையாளம்
காட்டுபவை.
இந்தப் பேரழிவு, நாம் அடைந்திருக்கும்
நாகரீகத்தின் உச்சத்தை நமக்குக் காட்டுமா? அழிவின் தருணத்தில் வெளிப்படும்
உன்னதங்கள் மிக இயல்பானவை. பேரழிவின் தாண்டவம் மனித உணர்வுகளைத்
தூண்டுவதால், இயல்பாக அந்த உன்னதங்கள் அந்தந்த மனிதர்களின் இயல்பிற்கேற்ப
வெளிப்படும். இங்கு அவர் களத்தில் இறங்கி மக்களுக்கு உதவினார். இவர்
எதுவுமே செய்யவில்லை போன்ற புலம்பல்கள் அர்த்தமில்லாதவை. களத்தில்
இறங்காதவர்கள் இவற்றைப்பார்த்துக் கவலையற்று இருந்தார்கள் என்பது
சரியானதல்ல. அவரவர் இயல்பிற்கேற்ப வெவ்வேறு உணர்வுகளுக்கு
ஆட்பட்டிருப்பார்கள். இயல்பிற்கேற்ற களப்பணிகளை செய்திருப்பார்கள். இவை
பற்றி பேசி, எழுதிக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் களப்பணி செய்தவர்கள் அல்ல.
அவ்வாறு செய்வது சாத்தியமும் இல்லை. ஆனால் அனைவரும் பேரிழப்பின்
உணர்வெழுச்சிகளை அடைந்திருப்பார்கள்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment