“ஆர்ட்டுரோ
டி மோடிக்கா” (Arturo Di Modica) என்ற சிற்பி உருவாக்கிய “சார்ஜ்ஜிங்
புல்” (Charging Bull) என அழைக்கப்படும் நியூயார்க் நகரின் “பாயும் காளை”
சிற்பம் 3,200 கிலோகிராம் எடையும், 11 அடி உயரமும், 18 அடி நீளமும் கொண்ட
ஒரு வெண்கல சிற்பம் (bronze sculpture). நியூயார்க் நகருக்கு வரும்
சுற்றுலாப்பயணிகள் பார்க்கவிரும்பும் இடங்கள் என்ற பட்டியலில் இடம்
பிடித்துள்ள இந்தப் புகழ்பெற்ற சிற்பம் “வால் ஸ்ட்ரீட் புல்” (Wall Street
Bull) எனவும், “பவுலிங் கிரீன் புல்” (Bowling Green Bull) எனவும்
அழைக்கப்படுவதுண்டு. அமெரிக்க நியூயார்க் நகரின், மன்ஹாட்டனில் உள்ள நிதி
மாவட்டத்தின் பவுலிங் கிரீன் பார்க் (at Bowling Green Park, Financial
District of Manhattan, New York City, USA) என்ற இடத்தில்தான், இந்தப்
பாயும் காளை சிற்பம் நிறுவப்பட்டுள்ளது. இதனை உருவாக்க இதன் சிற்பி
ஆர்ட்டுரோ டி மோடிக்கா $360,000 டாலர்களைச் செலவிட்டார்.
பாயும்
காளை நியூயார்க் நகரின் சின்னமாகவும், வால் ஸ்ட்ரீட்டின் சின்னமாகவும்
கருதப்படுவதால் வால் ஸ்ட்ரீட் ஐகான் (Wall Street icon), ஃபைனான்சியல்
டிஸ்ட்டிரிக்ட் ஐகான், நியூயார்க் ஐகான் என்றும் குறிப்பிடப்படுவதுண்டு.
முரட்டுக்காளை தோற்றத்துடன் பின்னோக்கிச் சரிந்து, கூர்மையான கொம்புகள்
கொண்ட தலையைத் தாழ்த்தி, சீற்றத்துடன் முன்நோக்கிப் பாயத் தயாராக உள்ள
காளையின் அமைப்பில் வடிக்கப்பட்டுள்ள இந்தச் சிற்பம் அமெரிக்கப்
பொருளாதாரத்தின் ஆளுமைத் தன்மையையும், செழிப்பையும், நிதிநிலை
முன்னேற்றத்தில் கொண்டுள்ள ஆணித்தரமான நம்பிக்கையை வெளிப்படுத்தும் வால்
ஸ்ட்ரீட்டின் பண்பையும் சித்தரிக்கும் வகையிலேயே அமைக்கப்பட்டுள்ளது.
உருவில் மிகப் பெரியதாக அமைந்ததால், பல பாகங்களாக செய்யப்பட்டு, அவையாவும்
இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டச் சிற்ப வடிவம் இது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment