இக்கால இந்தியாவின் அரசியலிலும், சமூக
அமைப்பிலும் எண்ணற்ற மாற்றங்கள் எத்தனையோ ஏற்பட்டிருந்தாலும், வரலாற்றிற்கு
முற்பட்ட காலத்திலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்க காலம்
வரையில், ஒரு மாறுதலற்ற தேக்க நிலையில் இந்தியாவின் சமூக வாழ்வு
அமைந்திருந்தது என்பதாக கார்ல் மார்க்ஸ் (The British Rule in India – Karl
Marx) கருதினார். அதுபோன்றே, இந்தியாவின் நிலையில், பொருளாதார
அடிப்படையில் படிப்படியாக புராதனப் பொதுவுடைமை, அடிமையுடமை,
நிலபிரபுத்துவம், முதலாளித்துவம், சோஷலிசம் எனப் பல நிலைகளைச்
சந்தித்ததற்கான வரலாற்றுச் சான்றுகளைக் காட்ட இயலாது என்று மார்க்சிய
வரலாற்று ஆசிரியர் டி. டி. கோசாம்பி கருதினர்.
இக்கருத்தைப்
பெரியார் தனது கோணத்தில், நமது நாட்டில் இந்தச் சாதீய அடிப்படையிலான
அடிமைத்தனம் ஒவ்வொரு அரசகுலத்தின் ஆட்சியிலும், பேரரசுகளிலும்மாறாது, காலம்
காலமாக ஊறிப்போயிருப்பதாகக் குறிப்பார். இருபதாம் நூற்றாண்டின்
துவக்கத்தில் வெளியிடப்பட்ட இந்திய மக்கள் கணக்கெடுப்பு அறிக்கை ஒன்று
(1901), சென்னை மாகாணத்தில் நிலவிய சாதீயமானது மனிதர் ஒருவரின் வாழ்வை,
வேலையை, இருப்பிடத்தை, சமூக அந்தஸ்தை, உணவை,பெயரை, உடையைத் தீர்மானிக்கிறது
என்றே குறித்திருந்தது. இவ்வாறு வாழ்வில் பிறந்ததிலிருந்து, இறப்பதுவரை
பிரிக்கவழியின்றி வாழ்வோடு கலந்து ஒருவரது வாழ்வின் போக்கையே
தீர்மானிக்கும் நிலையில் புரையோடிப் போயிருந்த பாகுபாட்டையும், சமத்துவமற்ற
பேத நிலையையும் அசைத்துப் பார்க்க முற்பட்டவர் தந்தை பெரியார். வரலாற்றுப்
போக்கில் பெரியார் புரட்சி செய்த காலம் ஒரு மிக முக்கியமான காலகட்டம்
என்பதை யாராலும் மறுக்க இயலாது. ஒரு எழுத்தாளராக … இதழியலாளராக … தனது
எழுத்து, உரை ஆகியவற்றால் தமிழக வரலாற்றைப் புரட்டிப்போட்ட பெரியாரை,
அறிஞர் அண்ணா, “பெரியார் ஒரு சகாப்தம்; ஒருகாலகட்டம்; ஒரு திருப்புமுனை”
என்று புகழ்ந்துரைத்தார். அத்தகைய பெரியாரது கருத்துப் பரப்பல் முயற்சியை
மீண்டும் திரும்பிப் பார்க்கும் பொழுது மலைக்க வைக்கிறது.
ஒரு எழுத்தாளராக, இதழியலாளராக
போராட்டங்கள் பல சந்தித்து தனது கருத்துகளை, உரைகளை மக்களிடம் தனது
பத்திரிக்கைகள் மூலம் கொண்டு சேர்த்த பெரியாரின் பணி வியக்கவைப்பது.
தமிழகத்தில் வெறும் 7% மக்களே எழுதப் படிக்கத் தெரிந்திருந்த ஒரு
காலகட்டத்தில், அவர்களிலும் 5% பிராமண குல மக்களாகவும் இருந்த காலத்தில்,
இந்துமதத்தின் ஆணிவேரை அசைக்கும் நோக்கில், சனாதன தர்ம அமைப்பையும், வர்ண
முறையையும் தீவிரமாக எதிர்க்கும் கருத்துகள் நிரம்பிய ஏடுகளை, வசதியற்ற
ஒடுக்கப்பட்ட மக்கள் கூட்டத்தினர் ஓரணா, ஈரணா என்ற விலையையும் கூடப்
பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் வாங்கிப் படிக்கும் நிலையை உருவாக்கிய
பெரியாரை, அதனால் மக்களின் சிந்தனையில் தெளிவை வளர்க்க விரும்பிய பெரியாரை
எழுத்தாளராக, இதழியலாளராக பாராட்டுவது என்பதை அவர் வாழ்ந்த காலத்தில்
வாழ்ந்தவராலும் கூட சிறப்பாகச் செய்ய இயலாது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment